இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தற்போது டிஜிட்டல் பேமெண்ட் அனைவரின் கைக்கும் சென்றுள்ள நிலையில், மக்களும் மொபைல் ரீசார்ஜ் தொடங்கி மின்சார கட்டணம் வரை அனைத்தையும் தங்களது போனிலே செய்து வருகின்றனர். இதனால், பணபரிவர்த்தனை செயலிகளுக்கு இடையேயான போட்டிகளும் அதிகரித்தன. அதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு போட்டிபோட்டுக்கொண்டு கேஷ்பேக் சலுகைகளையும் இந்த செயலிகள் வழங்கி வந்தன.
இப்படி, வாடிக்கையாளர்களை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு பழக்கப்படுத்திய நிறுனங்கள் தற்போது மெதுவாக இதுபோன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க தொடங்குகின்றன. அந்தவகையில், வால்மார்ட் குழுமத்தின் டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான PhonePe, யுபிஐ மூலமாக 50 ரூபாய்க்கு மேல் செய்யப்படும் மொபைல் ரீசார்ஜ் பரிவர்த்தனைக்கு செயல்முறை கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து, யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய முதல் டிஜிட்டல் பேமெண்ட் செயலி நிறுவனமாக போன்பே விளங்குகிறது. அதன் போட்டியாளர்களால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் சேவைக்கு போன்பே கட்டணம் நிர்ணயத்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போன்பே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "50 ரூபாய்க்கு குறைவான ரீசார்ஜ்களுக்கு கட்டணம் கிடையாது. ரூ.50 முதல் ரூ.100 வரையிலான ரீசார்ஜ்களுக்கு 1 ரூபாயும், ரூ.100க்கு மேல் 2 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இணைய தளங்களில் கட்டணம் வசூலிக்கும் முதல் நிறுவனம் நாங்கள் கிடையாது. பல பேமெண்ட் செயலிகள் சிறிய அளவிலான கட்டணம் வசூலிப்பது என்பது தற்போது நிலையான தொழில் நடைமுறையாக உள்ளது. இதில் நாங்கள் செயல்முறை கட்டணத்தை வசூலிக்கிறோம்.
பல நிறுவனங்கள் ஏற்கனவே ட்ஜிட்டல் பணப் பிரவர்த்தனை தளத்தில் சிறிய அளவிலான தொகையை செயல்முறை கட்டணமாக வசூலித்துவருகிறது. நாங்கள் கிரெடி கார்ட் மூலம் நடைபெறும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்கிறோம்" என்றார்.
மூன்றாம் தர பணபரிவர்த்தனை செயலிகளில் யுபிஐ பரிவர்த்தனைகளில் போன்பே முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் செப்டம்பரில் 165 கோடி யுபிஐ பரிவர்த்தனைகளை அதன் தளத்தில் பதிவு செய்துள்ளது, இது மொத்த செயலி வழி பயன்பாட்டு பிரிவில் 40 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.
ஜூலை மாதம் வெளியான பெர்ன்ஸ்டீன் அறிக்கையில், "வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடி வழங்குவதில் போன்பே மற்றும் குகூள் ப்ளே கவனம் செலுத்திவருகிறது. குறிப்பாக, இந்நிறுவனங்கள் 2.5 முதல் 3 சதவிகிதம் வரை சந்தையில் செலவழித்துள்ளது. அதேசமயம், சந்தையில் செலவிடுவதை பேடிஎம் குறைத்துவருகிறது.
2017ஆம் நிதியாண்டை காட்டிலும் 1.2 சதவிகிதம் குறைவாக தான் பேடிஎம் செலவழித்துள்ளது. அந்த தொகை 2020ல் 0.4 சதவிகிதமாகவும், 2021இல் 0.2 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. அதற்கு நேர் மாறாக, யுபிஐ, பிஓஎஸ், இணைய பரிவர்த்தனை தொடர் வளர்ச்சி கண்டுள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், இனி வரும் காலங்களில் அனைத்து விதமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுமோ என்ற அச்சம் நுகர்வோரிடம் ஏற்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: News On Instagram, Online Transaction, Phonepe, UPI