பிரபல சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடல், ஒருவழியாக சீனாவில் அறிமுகமானது. ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவிலான ஆர்வத்தை உருவாக்கும் ஒன்பிளஸின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை பற்றிய பலம் லீக்ஸ் மற்றும் வதந்திகளுக்குப் பிறகு அதிகாரபூர்வ அறிமுகம் நடந்துள்ளது.
இந்த சீன அறிமுகத்தின் வாயிலாக இதன் இந்திய அறிமுகத்திற்கு முன்னதாகவே, குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் நமக்கு தெரிய வந்துள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஆனது குவால்காமின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் எல்டிபிஓ (LTPO) டிஸ்ப்ளே பேனலுடன் வருகிறது, இது 120 ஹெர்ட்ஸ் வரை வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கும்.
ஒன்பிளஸ் 10 ப்ரோ விலை:
ஒன்பிளஸ்10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் டாப்-எண்ட் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என்கிற மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.54,500 ஆகும், 256 ஜிபி வேரியண்ட்டின் விலை தோராயமாக ரூ.58,000 ஆகும், கடைசியாக உள்ள 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மறுபாட்டின் விலை தோராயமாக ரூ.61,400 ஆகும். இது வல்கனோ பிளாக் மற்றும் எமரால்டு பாரஸ்ட் என்கிற இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் 10 ப்ரோ அம்சங்கள்:
ஸ்பெக்ஸ் ஷீட்டை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலானது 6.7 இன்ச் எல்டிபிஒ அமோலேட் டிஸ்ப்ளேவை க்யூஎச்டி+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோ அதன் ரெஃப்ரெஷ் ரேட்டை 1 ஹெர்ட்ஸ் இலிருந்து 120 ஹெர்ட்ஸ் வரை தானாகவே சரிசெய்ய அதன் டிஸ்ப்ளேவை அனுமதிக்கும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் சமீபத்திய முதன்மை சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 மூலம் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி உள்ளது, இது 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது.
ஒன்பிளஸ் 10 ப்ரோ கேமரா:
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஆனது 48 மெகாபிக்சல் மெயின் சோனி ஐஎம்எக்ஸ்789 ஷூட்டர், சாம்சங்கிலிருந்து 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 8 மெகாபிக்சல் மூன்றாம் நிலை ஷூட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை பேக் செய்கிறது. கடந்த முறை போலவே, இந்த ஆண்டும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு ஸ்வீடிஷ் கேமரா தயாரிப்பாளரான ஹாஸ்லெப்ளாடுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தவரை, இதில் 32-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்615 கேமரா உள்ளது.
ஒன்பிளஸ் 10 ப்ரோ கனெக்டிவிட்டி மற்றும் சாஃப்ட்வேர்:
கனெக்டிவிட்டிகளைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது ப்ளூடூத் வி5.2, வைஃபை, என்எப்சி, யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பலவற்றுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 12.1 உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது இது ஆக்சிஜென் 12 உடன் வரும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பயனர்களுக்கு உறுதியளித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.