இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் வலைத்தளமான IRCTC வழியே பயணிகள் அதிவேக விரைவு ரயில் மற்றும் நீண்ட தூரம் செல்லும் ரயில்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி லட்சக்கணக்கான ரயில் பயணிகளுக்கு உதவியாக இருந்து வருகிறது. டிக்கெட் கவுண்ட்டர்களின் முன்னே நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டை புக் செய்ய வேண்டும் என்ற அவசியம் காணாமல் போனது. கணினி அல்லது தற்போது மொபைல் ஆப் வழியாக சில நிமிடங்களிலேயே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
டிக்கெட் முன்பதிவுக்கு பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை ரயில்வே மற்றும் IRCTC விதித்திருந்தது. இந்நிலையில் இதில் ஒரு மாதம் ஒரு நபருக்கு இவ்வளவு டிக்கெட்டுகள் தான் முன்பதிவு செய்ய முடியும் என்ற விதிமுறையும் உள்ளன. அதில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாறுதலைப் பற்றி பார்க்கலாம்.
பொதுவாக ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் டிக்கெட் பதிவு செய்யும் நபர் ஒரு யூசர் கணக்கை ரிஜிஸ்டர் செய்து வைத்திருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட யூசர் கணக்கில், ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தால், ஒவ்வொரு மாதமும் 6 டிக்கெட்கள் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். மேலும், IRCTC கணக்கில், அதன் யூசரின் ஆதார் இணைத்து இருந்தால், அந்த நபர் மாதத்திற்கு 12 டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதைப் பற்றி அமைச்சகம் கூறுகையில், “பலரும் ரயில் சேவைகளை தேர்வு செய்யும் நிலையில், வேலை, வணிகம் மற்றும் பல்வேறு காரணங்களுக்கு அடிக்கடி ரயில் பயணம் செய்யும் சூழல் ஏற்படலாம். அப்போது மாதத்திற்கு 6 அல்லது 12 டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பது சிலருக்கு கடினமாக இருக்கும். இதனால், தற்போது ஆதார் இணைக்காத யூசர் கணக்கில் 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும் மற்றும் ஆதார் இருந்தால் 24 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும் என்று மாதாந்திர புக்கிங் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்” என்று தெரிவித்தது.
Also Read : இனி ரயிலில் நிம்மதியா தூங்கலாம்... ‘வேக் அப் கால்’ சேவையை ஆக்டிவேட் செய்வது எப்படி தெரியுமா.?
ஆதார் நம்பரை உங்கள் IRCTC கணக்குடன் இணைப்பது எப்படி:
*
http://irctc.co.in லின்க்கில் உங்கள் யூசர் கணக்கில் லாகின் செய்யவும். நீங்கள் லாகின் செய்த பக்கத்தில், My Account (என்னுடைய கணக்கு) என்ற ஆப்ஷனின் கீழ் Link Your Aadhaar (உங்கள் ஆதார் எண்ணை இணைக்கவும்) என்பதைக் கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு, உங்கள் ஆதார் விவரங்களை உள்ளிட்டு, செக் பாக்ஸை டிக் செய்து, OTP ஐ அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
* உங்கள் ஆதார் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு OTP கிடைக்கும். அந்த OTP ஐ, திரையில் உள்ளிட்டு, ஆதார் எண்ணை வெரிஃபை செய்யவும். உங்கள் ஆதார் எண் சரிபார்க்கப்பட்டால், நீங்கள் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.