ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

நோக்கியா ஆலையை கைப்பற்றிய சேல்காம்ப்! தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்கவுள்ள செல்போன் உற்பத்தி

நோக்கியா ஆலையை கைப்பற்றிய சேல்காம்ப்! தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்கவுள்ள செல்போன் உற்பத்தி

ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்டுள்ள நோக்கியா ஆலையை அதனருகில் இயங்கிய பின்லாந்தை சேர்ந்த சேல்காம்ப் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

2006-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் உற்பத்தியை பின்லாந்தை சேர்ந்த நோக்கியா நிறுவனம் தொடங்கியது. 8 ஆயிரம் பேர் நேரடியாகவும், நோக்கியாவுக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களில் மேலும் 22 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைத்தது.

ஹூண்டாய், நோக்கியா போன்ற பெரு நிறுவனங்களின் வருகை காஞ்சி மற்றும் அண்டை மாவட்டங்களில் வசித்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. 2006 முதல் 2013 வரை 75 நாடுகளுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றுமதி செய்து கோலோச்சியது நோக்கியா. எனினும் ஆண்டிராய்டு போன் வருகையால் 2011-ம் ஆண்டு முதல் விற்பனை சரிந்தது. இதனிடையே வருமான வரித்துறையும், தமிழக வணிகவரித்துறையும் நோக்கியா நிறுவனம் 23 ஆயிரத்து 400 கோடி வரிபாக்கி செலுத்தவேண்டும் என நோட்டீஸ் அனுப்பின. அதை நோக்கியா ஏற்க மறுத்தது.

இந்நிலையில் 2013-ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு நோக்கியா ஆலை முழுமையாக கைமாறியது. ஸ்ரீபெரும்புதூர் ஆலையை மட்டும் ஏற்க மைக்ரோசாப்ட் தயங்கியது. இதனிடையே ஆலையை மூடுவதாக கூறிய நோக்கியா விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. அதை ஏற்க மறுத்து தொழிற்சங்கங்கள் களமிறங்கின. எனினும் பின்னாளில் நோக்கியா அளித்த செட்டில்மென்ட் தொகையோடு ஊழியர்கள் திருப்தியடைய நேரி்ட்டது.

இதனிடையே, இந்தியா - பின்லாந்து அரசுகள் பேசி நோக்கியாவின் வரி பாக்கியை 2018-ல் 1,600 கோடி ரூபாயாக குறைத்தன. இந்நிலையில், நோக்கியா நிறுவனத்தின் ஒரு அலகையும், உபநிறுவனமான லைட் ஒன் நிறுவனத்தையும் சேல்காம்ப் நிறுவனம் கையகப்படுத்தியிருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூரில் ஏற்கனவே இயங்கும் செல்போன் சார்ஜர் உற்பத்தி நிறுவனமான சேல்காம், அடுத்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் என்றும் நேரடியாக 10 ஆயிரம் பேர் உள்பட 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெறுவர் என்றும் கூறியுள்ளார்.

2019-ல் நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் 500 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் சேல்காம்ப் கையெழுத்திட்டிருந்தது. ஆண்டுக்கு 20 கோடி சார்ஜர்கள் உற்பத்தி செய்யும் சேல்காம்ப் இனி ஏற்றுமதியில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.

இதுபோல், நோக்கியா ஆலை அருகில் பாக்ஸ்கானில் ஐ-போன் தயாரிப்புப் பணிகளை ஆப்பிள் செல் நிறுவனம் துவங்கியுள்ளது. நோக்கியா ஆலைக்கு புத்துயிர் கிடைக்கும் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. நோக்கியா வெளியேறிய பின் நாட்டின் முன்னணி மின்னணு உற்பத்தி மையம் என்ற பெருமையை தமிழகம் பறிகொடுத்த நிலையில் இப்புதிய அறிவிப்புகள் நம்பிக்கையூட்டியிருக்கின்றன.

Also see:

 

Published by:Karthick S
First published: