Exclusive : இருட்டிற்குள் வேலை செய்கிறார் செல்லூர் ராஜூ - மதுரை மேற்கு நா.த.க வேட்பாளர் வெற்றிக்குமரன்

வெற்றிக்குமரன்

செல்லூர் ராஜூ எனக்கு தகுதியான எதிரி அல்ல. ஜெயலலிதா கொடுத்த வாய்ப்பால் மேலே வந்து விட்டார். அவருக்கென்று தனி தகுதி கிடையாது. அவருக்கு எதுவும் தெரியாது.

  • Share this:
1980ல் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற தொகுதி - மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி. இத்தொகுதியில் இம்முறை அ.தி.மு.க சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ, தி.மு.க சார்பில் சின்னம்மாள் ஆகியோரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றிக்குமரன் போட்டியிடுகிறார். பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2016 தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு குறைவான வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார். இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் மேற்கு தொகுதியில் களம் காண்கிறார். நியூஸ் 18 க்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டி:

கேள்வி: உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

100% நம்பிக்கை உள்ளது. மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நான் தான் வெற்றி பெறுவேன். கடந்த கால ஆட்சி மேல் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள். 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு மக்களுடைய எந்த குறைகளையும் அவர் சரி செய்யவில்லை. எனவே, அ.தி.மு.க, தி.மு.க கட்சியினருக்கு மீண்டும் தொகுதியை கொடுக்க மக்களுக்கு விருப்பமில்லை.

கேள்வி: இரண்டு முறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜீவை எதிர்த்து களம் காண்கிறீர்கள். உங்களுடைய பலம் என்ன, சவால் என்ன?

செல்லூர் ராஜூ எனக்கு தகுதியான எதிரி அல்ல. ஜெயலலிதா கொடுத்த வாய்ப்பால் மேலே வந்து விட்டார். அவருக்கென்று தனி தகுதி கிடையாது. அவருக்கு எதுவும் தெரியாது என்பதை கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாக நிரூபித்து உள்ளார்.உலகமே சிரிக்கும் வகையில் பல திட்டங்களை செய்து தமிழக மக்களை அவமரியாதையை தேடிக் கொடுத்து விட்டார். ஆனால், நான் அப்படியல்ல. ஒரு பொறியியல் பட்டதாரி. அதிகாரமே இல்லாமல் மக்களுக்கு தேவையான உதவிகளை முடிந்த அளவில் செய்துள்ளோம். மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை கேட்கிறோம்.இதற்கு மாறாக மற்றவர்கள், இருட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு ஆள் கணக்கு எடுத்து ஒட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் தகுதியையும், தைரியத்தையும் இழந்து விட்டார்கள். மக்களை சந்திக்க போனால் எதிர்ப்பு தெரிப்பார்கள் என்பதே களத்தில் உள்ள நிதர்சனமான உண்மை.

கேள்வி: இந்த தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க என்ற இரண்டு கட்சிகளோடு சேர்த்து மேலும் சில கட்சிகளும் களம் காண்கின்றன. இதில், மக்கள் நாம் தமிழருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

மக்களுக்கு இருக்கும் ஒரே மாற்றுக் கட்சி நாம் தமிழர் தான்.நாங்கள் கட்சி துவங்கிய நாளில் இருந்து கொள்கை மாறாமல் இருக்கிறோம். திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றோம் அதில் உறுதியாக இருக்கிறோம்.ஆனால், கமல் அப்படி அல்ல. ஊழல், லஞ்சத்தை ஒழிப்போம் என்று தெரிவித்து விட்டு காங்கிரஸ், திமுக கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசினார். அவர் எப்படி மாற்று கட்சியாக இருக்க முடியும்...

கேள்வி: வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்ன செய்வீர்கள்?

எல்லா வேட்பாளர்களும் சொல்வது போல சாலையை சரி செய்வேன், சாக்கடையை சரி செய்வேன் என்று சொல்லிவிட்டு போவதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருப்பேன். என் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் ஒரு பைசா கூட லஞ்சம், ஊழல் இருக்காது. அப்படி ஒரு அதிகாரி லஞ்சம் கேட்டார் என்று தெரிய வந்தால் அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டு தான் சாப்பிடவே போவேன். அப்படி என்னால் செய்ய முடியாவிட்டால், இந்த பதவியே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு சென்று விடுவேன்.சரியாக பணி நடக்கும் தொகுதி என்ற பெயரை மேற்கு தொகுதிக்கு நான் பெற்று தருவேன்.
Published by:Ramprasath H
First published: