பூமியில் வாழ்ந்தாலும் மனிதனுக்கு எப்போதுமே நிலவு மீது ஒரு தீராத காதல் உண்டு. அந்த வகையில் நிலவை வர்ணித்து கவிதை எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். நிலவுக்கு சென்று வாழ்வது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தாலும், அங்கே ஒருமுறையாவது சென்று வர வேண்டும் என்பது பலரது கனவு.
நிலவுக்கு மனிதன் செல்ல முடியுமா என்று வியந்த காலத்தில், 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, "அப்போலோ 11" விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அடுத்த 4 நாட்களில், ஜூலை 20ம் தேதி நிலவில் முதன்முறையாக தடம் பதித்தார் அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங். விண்வெளி ஆராய்ச்சியின் புதிய மைல் கல்லான இந்த சாதனையை உலகமே கொண்டாடியது.
பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது நிலவு. தொழில்நுட்ப வளர்ச்சியை பறைச்சாற்றும் வகையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் நிலவு குறித்து பலகட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சந்திரயான் விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பிலும், வளிமண்டல மேலடுக்கிலும் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.2019ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆர்பிட்டர் கருவி நிலவை சுற்றி ஆய்வு செய்து வருகிறது.
Also Read : ஆபீஸ்-க்கு வர சொன்னால் வேலையே வேண்டாம் - Apple நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கும் ஊழியர்கள்!
இதன் தொடர்ச்சியாக, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள, சந்திரயான் - 3 விண்கலத்தை வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பூமியில் மட்டுமே ஆக்சிஜன் இருப்பதாக நாம் அறிந்திருக்கும் நிலையில், நிலவிலும் ஆக்சிஜன் இருப்பதாக தெரிவித்துள்ளது சமீபத்திய ஆய்வு. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன், ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் செய்த ஒப்பந்தத்தின்படி, நிலவுக்கு ரோவர் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில்தான் ரெகோலித் எனப்படும் நிலவின் பாறை மேற்பரப்பில் 45 சதவீதம் ஆக்சிஜன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதன் மூலம் 800 கோடி பேர், ஒரு லட்சம் ஆண்டுகள் சுவாசிக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. நிலவில் ஆக்சிஜன் இருந்தாலும், அது வாயு வடிவில் இல்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
நிலவின் வளிமண்டலம் மிகவும் மெல்லியதாகவே இருப்பதாகவும், அதில் ஹைட்ரஜன், நியான், ஆர்கான் ஆகிய வாயுக்களே உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நிலவில் உள்ள சிலிகா, அலுமினியம், இரும்பு, மெக்னீசியம் ஆக்சைடு ஆகிய தாதுக்களில் ஆக்சிஜன் இருப்பதாகவும், எனினும் அது மனித நுரையீரலால் சுவாசிக்க முடியாத தன்மையில் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாதுக்களில் உள்ள ஆக்சிஜனை Electrolysis முறைப்படி பிரித்தெடுக்க முடியும் என்றும், இதற்கு அதிகளவில் மின்சாரம் தேவைப்படும் என்பதால், சூரிய சக்தியை பயன்படுத்தி ஆக்சிஜன் பிரித்தெடுக்கும் பணியை மேற்கொள்ளலாம் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெல்ஜியத்தை சேர்ந்த Space Applications Services என்ற தனியார் நிறுவனம், Electrolysis மூலம் ஆக்சிஜனை உருவாக்க, பிரத்யேக 3 உலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த உலைகளை வரும் 2025ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Electrolysis தொழில்நுட்பத்தின்படி, சுவாசிக்க கூடிய அளவுக்கு ஆக்சிஜன் உருவாக்கப்பட்டால், நிலவிலும் மனிதன் வீடு கட்டுவது சாத்தியமே...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.