Home /News /technology /

மார்கழி கோலம்போட செயலி வந்துவிட்டது... எத்தனை புள்ளி வச்சாலும், விதவிதமா கோலம் போடலாம்....

மார்கழி கோலம்போட செயலி வந்துவிட்டது... எத்தனை புள்ளி வச்சாலும், விதவிதமா கோலம் போடலாம்....

கோலம்

கோலம்

கோலசுரபி என்ற இணையச் செயலி புதுப் பொலிவுடன் மார்கழி மாதத்தில் தற்போது அறிமுகமாகியுள்ளது. வாங்க அதனை பற்றி தெரிந்துக் கொள்வோம்...

தமிழர்களின் எண்ணற்ற கலாச்சாரங்களுள் முக்கியமானது அதிகாலையில் எழுந்து வாசலில் கோலமிடுவதாகும். மார்கழி என்றாலே யாத்திரைகளும் வழிபாடுகளும் நிறைந்த மாதத்தில் கோலமும் முக்கியத்துவம் பெறுகிறது. இணையவழிக் கச்சேரிகள், திருவிழா நேரலைகள் என்று ஒவ்வொன்றாகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தக் காலகட்டத்தில் கோலத்தை வரையவும் மென்பொருள் ஒன்று உள்ளது.

கோலம் என்பது சுண்ணாம்புப் பொடியில் வரையும் வடிவம் மட்டுமல்ல அதன்பின் கணிதநுட்பமான வடிவியலும், சேர்வியலும் உள்ளன. அதைச் சரியாகக் கணித்து, கணிதப் பண்புகளாகக் கணினிக்குக் கொடுத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்குக் கோலங்களை உருவாக்கலாம். அத்தகைய முயற்சியாக கோலசுரபி என்ற இணையச் செயலி புதுப் பொலிவுடன் மார்கழி மாதத்தில் தற்போது அறிமுகமாகியுள்ளது.

தமிழர்களின் கலை வடிவான கோலங்களை இணையத்தில் உருவாக்கிக் கொள்ள உதவும் இந்தப் புதுமையான செயலியை அதற்கான http://apps.neechalkaran.com/kolasurabhi முகவரியில் பயன்படுத்தலாம். கைப்பேசி அல்லது கணினி வழியாக எளிதாக அணுகி, கோலங்களை வரைந்து சேமித்துக் கொள்ளமுடியும். நேர்ப்புள்ளி, ஊடு புள்ளி கோலங்கள், நட்சத்திரக் கோலங்கள், கம்பிக் கோலங்கள் போன்ற சிக்கலான கோலங்கள் அனைத்தையும் நொடியில் வரைந்து கொடுக்கிறது.

இதில் தான்தோன்றித்தனமாகப் பல கோலங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொருமுறை உருவான கோலம் நழுவு படங்களாக திரையில் இருப்பதால் ஒப்பிட்டும் பார்க்கலாம். யாருடைய உதவியுமின்றி விரும்பிய புள்ளிகளில், விரும்பிய நிறத்தில் புதுப்புதுக் கோலங்களை இதில் உருவாக்கிக் கொள்ளலாம்.

சில கோலங்கள் யாருமே வரையாத கடினமான முடிச்சுகளுடனும், அழகான வளைவுகளுடனும் வரும். கோலப்போட்டிகளுக்குத் தயாராகும் முன்னர் இதில் உலாவினால் நிச்சயம் வெற்றிக்கான கோலம் கிடைக்கும். நமது அழைப்பிதழ்கள், பதாகைகள் போன்றவற்றில் அழகூட்ட இந்த வடிவங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும். மேலும் குழந்தைகளும் கைப்பேசி அல்லது கணினியில் பார்த்து வரைந்து பழகலாம்; இக்கோலங்களை அச்சிட்டு, குழந்தைகளுக்குத் தந்தால் சிறந்த பொழுது போக்காகவும் கற்பனைத் திறனை அதிகரிக்கவும் உதவும்.

கோலம் என்பது கணிதமும், கலையுணர்வும் கலந்த கலவை. சங்கப் பாடலான நற்றிணையில் "வரி" என்றும் அகநானூற்றில் "கோல்" என்றும் பரிபாடலில் "அழகு/ஒப்பனை" என்றும் பல்வேறு குறிப்புகள் கோலத்தைப் பற்றி உள்ளன. வரிவடிவக் கோலங்கள் தவிர பெரும்பாலும் நான்கு அல்லது இரு புறமும் ஒரே ஒழுங்கில் சதுரம், வட்டம், அறுகோணம் அல்லது எண்கோணம் வடிவில் இருக்கும். சிக்கு, நெளி, கம்பி, புள்ளி போன்றவை அதன் அங்கங்களாகும். ஒருமுறை வந்த வழியே கோடுகள் மீண்டும் வரக்கூடாது.

எங்குமே கூரிய முனையில் வளையக் கூடாது. அனைத்துப் புள்ளிகளையும் கோடுகள் கடந்திருக்க வேண்டும் இவை கோலத்தின் விதிகள். ஆந்திராவில் முக்கு, மேற்கு வங்காளத்தில் ஆல்பனா என்றும், சத்தீஸ்கரில் சௌக்புராணா என்றும் இதர பகுதிகளில் ரங்கோலி, ரங்கவல்லி என்றும் அழைக்கப்படுகிறது.

கோலப்பொடி, அரிசிமாவு, சாணம், வண்ணப்பொடி, பூக்கள் போன்றவை கோலங்கள் வரையப் பயன்படும் பொருட்கள். நட்சத்திரம், விளக்கு, தாமரை, ரோஜா, அன்னம், கிளி, மயில் போன்றவை கோலங்களில் அதிகமாக இடம் பெறும் வடிவங்களாகும்.

மேலும் படிக்க... ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவரா நீங்கள்? கூகுள் வெளியிட்டுள்ள 5 வழிகள்!

வாசலில் கோலங்கள் இடுவதென்பது ஒரு கலையே. ஓவியம் என்பது தனியொரு கலையாகயில்லாமல் அன்றாட வாழ்வில் கலந்தவொன்றாவிட்டது. கோலங்களைச் சிறுவயதில் நன்கு வரையும் குழந்தைகள் கணிதத்தில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். இராமானுஜரும் தனது தாயின் கோலங்களைப் பார்த்தே கணித வல்லுநராக உயர்ந்திருக்கலாம்.

கோலங்கள் கணிதத் திறனின் வெளிப்பாடு மட்டுமல்லாமல் கற்பனையின் வெளிப்பாடும் என்பதால் அக்கலையை அடுத்த தலைமுறையினரிடமும் கடத்த வேண்டும்.  கோலங்களை வரைந்து குழந்தைகள் பழக எளிய செயல்முறைப் பயிற்சிக்கான ஒரு http://apps.neechalkaran.com/assets/practice_book.pdf மின்னூலும் இதனுடன் உள்ளது.

இந்த நூலினை அச்சிட்டுக் கோலங்களுக்கு வண்ணம் தீட்டலாம், நிறைவடையாத கோலங்களை வரைந்து காட்டலாம். கோலப் பயிற்சிக்கான புத்தகங்கள் பெரிதாக இல்லை என்பதால் இதனைக் குழந்தைகளுக்குத் தந்து முயன்றும் பார்க்கலாம். நவீனமயமாகாத கலைகள் வழக்கிழந்து போகக்கூடும். கோலசுரபி போல நமது கலைகள் எல்லாம் நவீனமயமாக வேண்டும். கோலங்களை ரசிப்போம், கோலக்கலையை வளர்ப்போம்.

மேலும் படிக்க... பிறந்தது மார்கழி மாதம்... திருப்பாவை, திருவெம்பாவை பாடல் -1

(எழுத்தாளர் நீச்சல்காரன், மென்பொறியாளராவார். இவர் தமிழ் கணினி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். கோலசுரபி இணைய செயலியை உருவாக்கியவர்) 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Margazhi, Pongal kolam 2021

அடுத்த செய்தி