இனி மொபைல் போன் தயாரிப்பு கிடையாது: எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு

இனி மொபைல் போன் தயாரிப்பு கிடையாது: எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு

எல்.ஜி நிறுவனம்.

நஷ்டத்தில் இயங்கி வருவதால் மொபைல் போன் தயாரிப்புக்கு முழுக்கு போட்டது எல்.ஜி நிறுவனம்.

  • Share this:
தென் கொரியாவின் சியோலை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலகின் மிகப்பெரிய மின்னணு நிறுவனமான எல்.ஜி தொலைக்காட்சி பெட்டிகள், ஃபிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், ஏர் பியூரிஃபையர்கள், வேகுவம் கிளீனர்கள், திரைப்பட புரொஜெக்டர்கள், மொபைல் சாதனங்கள் என பல எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிலையில் மொபைல் போன் உற்பத்தியை நிறுத்துவதாக எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நஷ்டம் ஏற்பட்டு வருவதால் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மொபைல் போன் உற்பத்தியை பொறுத்தவரையில் கடந்த 6 ஆண்டுகளில் $4.5 பில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 33,000 கோடி ரூபாய் நஷ்டத்தை எல்.ஜி நிறுவனம் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது.

2013ம் ஆண்டில் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு அடுத்ததாக உலகின் 3வது பெரிய மொபைல் போன் உற்பத்தி நிறுவனமாக எல்.ஜி திகழ்ந்தது. இருப்பினும் மென்பொருள் மற்றும் வன்பொருள்களில் தொழில்நுட்ப மேம்பாடுகள் போட்டிக்கு தகுந்தபடி இல்லாத காரணத்தினால் விற்பனையில் எல்.ஜி மொபைல்கள் சரிவை சந்தித்தன. மேலும் சீன நிறுவனங்களை போன்று மார்கெட்டிங்கிலும் எல்.ஜி சரிவர முனைப்பு காட்டவில்லை என்பதும் இந்த சரிவுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

தற்போதைய அளவில் எல்.ஜி நிறுவனத்திற்கு வட அமெரிக்காவில் கணிசமான சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. வட அமெரிக்காவில் 10% பங்களிப்புடன் 3வது பெரிய மொபைல் நிறுவனமாக எல்.ஜி செயல்பட்டு வருகிறது. வட அமெரிக்காவை தவிர்த்து லத்தீன் அமெரிக்காவிலும் கணிசமான பங்களிப்பை கொண்டுள்ளது எல்.ஜி. அங்கு 5வது பெரிய மொபைல் நிறுவனமாக எல்.ஜி விளங்குகிறது.

உலக அளவில் எல்.ஜி மொபைல்களில் சந்தை பங்கு 2% ஆக உள்ளது. கடந்த ஆண்டு 23 மில்லியன் மொபைல் சாதனங்களை எல்.ஜி நிறுவனம் விற்பனை செய்தது. அதே நேரத்தில் சாம்சங் 256 மில்லியன் சாதனங்களை விற்பனை செய்துள்ளது.

எல்.ஜி நிறுவனம் மொபைல் உற்பத்தியில் இருந்து வெளியேறுவதால் வட அமெரிக்காவில் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களும், தென் அமெரிக்காவில் சாம்சங், ஓப்போ, விவோ மற்றும் ஜியோமி போன்ற நிறுவனங்கள் பலனடையும் எனவும் இத்துறை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

உலக அளவில் நஷ்டம் காரணமாக மொபைல் போன் உற்பத்தியில் இருந்து வெளியேறும் முதல் பெரிய நிறுவனமாக எல்.ஜி மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: