Koo App: தாறுமாறாக எகிறும் யூசர்கள் - மகிழ்ச்சியில் 'Koo'

கடந்த ஓராண்டில் அபார வளர்ச்சியை எட்டியுள்ள கூ செயலி (Koo App), 1 கோடி யூசர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

  • Share this:
மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ’கூ செயலி’, இந்தியாவில் டிவிட்டருக்கு போட்டியாக உருவெடுத்து வருகிறது. உலகளவில் பிரபலமான சமூகவலைதளமாக இருக்கும் டிவிட்டர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சமூகவலைதளக் கொள்கையால் அதிருப்தியடைந்துள்ளது. இந்தியாவின் சமூக வலைதளக் கொள்கையை கடைபிடித்தால் மட்டுமே இந்தியாவில் செயல்பட முடியும் என தொடர்ந்து கெடு விதிக்கப்பட்டபோதும், அதனை ஏற்பதை டிவிட்டர் தொடர்ந்து தவிர்த்து வந்தது.

நாட்டின் பாதுகாப்பு, மக்களின் தனிநபர் தகவல் பாதுகாப்பு அகியவற்றைச் சுட்டிக்காட்டி, புதிய விதிகளை ஏற்கனவே வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இது குறித்து மத்திய அமைச்சர்கள் வெளிப்படையான விமர்சனங்களை டிவிட்டர் நிறுவனம் மீது வைத்தனர். பலர், டிவிட்டருக்கு பதிலாக ’Koo' செயலியை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். இதனால், நாடு முழுவதும் கூ செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கூ செயலி, ஏறக்குறைய 15 மாதங்களை நிறைவு செய்திருக்கிறது.

Also Read : உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த 8 ஆபத்தான ஆப் இருந்தால் டெலிட் செய்யவும் - பிளேஸ்டோரிலிருந்தும் நீக்கம்

இந்த குறுகிய காலத்தில் சுமார் 1 கோடி யூசர்கள் கூ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். டிவிட்டருக்கு மாற்றாக, கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்கும் தளமாக கூ இருந்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள கூ செயலி நிறுவனர்கள், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடிக்கும் அதிகமான யூசர்களை கூ சென்றடைய வேண்டும் என்பது தங்களுடைய முதன்மையாக இலக்கு எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய கூ செயலியின் இணை நிறுவனர் அப்ரமேயா ராதாகிருஷ்ணன், கூ செயலியை ஒருகோடி யூசர்கள் பதிவிறக்கம் செய்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

சந்தையின் போக்கு கூ செயலிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்த அவர், இந்த வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார். இந்தியாவைப் பொறுத்த வரை 2 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே டிவிட்டர் உள்ளிட்ட மைக்ரோபிளாகிங் தளங்களை பயன்படுத்துவதாக கூறும் ராதாகிருஷ்ணன், இந்த சந்தை இடைவெளியை தங்களுக்கு சாதகமாக மாற்றி, கூ செயலி எஞ்சியிருப்பவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரியில் இருந்து மட்டும் சுமார் 85 விழுக்காடு பதிவிறக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Also Read : உங்கள் லேப்டாப்பில் வைபை இணைப்பை பெறுவதில் சிக்கலா? - இவற்றை சரிபாருங்கள்!

இந்தியாவில் சமூகவலைதளங்களைப் பயன்படுத்தும் 70 கோடி பேரும் கூ செயலியை பயன்படுத்தும் வகையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். கூ செயலி, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளில் செயல்பட்டு வருகிறது. பிராந்திய மொழிகளின் பயன்பாடு இருப்பதால் யூசர்கள் அதிகளவில் கூ செயலியை பயன்படுத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தங்களின் இலக்கு திட்டமிட்டபடி சென்றால், அடுத்தடுத்த சில ஆண்டுகளில் 500 மில்லியன் யூசர்கள் வருவார்கள் என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: