வாட்ஸ் அப்பில் சர்ச்சை மெசேஜ்: 3-வது முறையாக நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு முடிவு

வாட்ஸ் அப்பில் சர்ச்சை மெசேஜ்: 3-வது முறையாக நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு முடிவு
வாட்ஸ் அப் செயலி
  • News18
  • Last Updated: September 21, 2018, 2:29 PM IST
  • Share this:
வாட்ஸ் அப்பில் பகிரப்படும் குறுந்தகவல்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரக் கோரும் விவகாரத்தில், அந்நிறுவனத்துக்கு 3-வது முறையாக நோட்டீஸ் அனுப்பும் யோசனையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உள்ளது.

வாட்ஸ் அப்பில் சர்ச்சைக்குரிய வகையில் பகிரப்படும் குறுந்தகவல்களை உருவாக்கிய நபர் யார் என்பதைக் கண்டறியும் வாய்ப்புகளை வழங்கும் வசதிகளை ஏற்படுத்துமாறு வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அத்தகைய வெளிப்படைத்தன்மையை கொண்டுவருவது பயனாளர்களின் தனிமனித உரிமையை மீறும் செயல் என்றும், அது தங்களது எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் கொள்கையை பாதிக்கும் என்றும் கூறி வாட்ஸ் அப் நிறுவனம் அதற்கான வசதிகளை வழங்க மறுத்து வருகிறது.


இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு அடுத்த 7 முதல் 10 நாட்களில் 3-வது முறையாக நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. அந்த நிறுவனத்தின் மறையாக்கக் கொள்கையில் (எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன்) சமரசம் செய்துகொள்ளாமலேயே, சர்ச்சைக்குரிய குறுந்தகவலை உருவாக்கி அதை அனுப்பியவரை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பத் தீர்வுகளை கண்டறிய இயலும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கருதுகிறது.

இதன் மூலமாக வாட்ஸ் அப்பில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர முடியும். அதே வேளையில் பரவலாகப் பகிரப்பட்ட சர்ச்சைக்குரிய குறுந்தகவலின் உள்ளடக்கத்தை பார்க்காமலேயே, அதை உருவாக்கிய நபரின் அடையாளத்தை மட்டும் கண்டறிய இயலும் என்றும் கருதுவதாக அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

வாட்ஸ் அப்பில் உலவும் போலியான குறுந்தகவல்கள் மூலமாக நாடெங்கும் பல்வேறு கும்பல் கொலை சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து, அத்தகைய குறுந்தகவல்களை உருவாக்குபவர்களை அடையாளம் காணும் வாய்ப்புகளை கண்டறியுமாறு வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
First published: September 21, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading