Home /News /technology /

ஓப்போ பிளஸ் ஆகிறதா ஒன் பிளஸ்?

ஓப்போ பிளஸ் ஆகிறதா ஒன் பிளஸ்?

  ஓப்போ பிளஸ் ஆகிறதா ஒன் பிளஸ்?

ஓப்போ பிளஸ் ஆகிறதா ஒன் பிளஸ்?

தொழில்நுட்ப ரீதியாக எல்லா ஏரியாக்களிலும் சமரசம் செய்து கொள்ளத் தொடங்கிய ஒன் பிளஸ் ஒட்டுமொத்தமாக தனது தரத்திலும் பெருமளவு சமரசம் செய்து கொண்டது.

ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங், ரெட்மி, மோட்டோராலா போன்ற பிராண்டுகள் கொடி கட்டி பறந்த நேரத்தில், 2013 காலகட்டத்தில் சந்தைக்குள் நுழைந்தது ஒன் பிளஸ். ஒப்போ நிறுவனத்துடன் இணைந்து தான் தயாரிப்பை மேற்கொண்டது என்றாலும் ஒன் பிளஸ் கவனம் ஈர்த்த அளவுக்கு ஓப்போ அப்போது சந்தையில் பேசுபொருளாகவில்லை. Never Settle – என்ற டேக் லைன் உடன், ஏராளமான எதிர்பார்ப்புகளை உருவாக்கியது ஒன் பிளஸ். வரும் போதே எக்கச்சக்கமான பில்டப் உடன் வந்த ஒன் பிளஸ், அந்த போனை வாங்கும் யாராவது ஒருவர் இன்வைட் கொடுத்தால் மட்டுமே அடுத்தவர் போனை வாங்க முடியும் என்றெல்லாம் சொல்லியது. ஆனால் அந்த பில்டப்க்கு சற்றும் குறை வைக்காமல் தரமான போனை முதன் முதலாக ஒன் பிளஸ் ஒன் என்ற மாடலில் இறக்கியது.

ஒன் பிளஸ் ப்ளாக்ஷிப் போனின் வருகை சாதாரண நிறுவனங்களுக்கு தான் பின்னடைவு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் அது ஆப்பிள் நிறுவனத்தை சற்று அசைத்துப் பார்த்தது. ஏராளமான ஆப்பிள் பயனாளர்களின் கவனம் ஒன் பிளஸ் பக்கம் திரும்பியது. பரவலாக உலக அளவில் ஒன் பிளஸ் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள துவங்கியது. அதன் பின்னர் ஒன் பிளஸ் 2, 3, 3T, 5, 5T, 6, 6T, 7, 7T, 8, 8T,8 Pro என அடுத்தடுத்து தனது செல்போன்களை அறிமுகப்படுத்தியது ஒன் பிளஸ். ஒவ்வொரு மாடலை அறிமுகப்படுத்தும் போது அதற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்து விடுவது அந்த நிறுவனத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. அதன் எதிரொலியாக கணிசமாக ஆப்பிள் பயனாளர்கள் ஒன் பிளஸ் பயனாளர்களாக மாறத் தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் ப்ளாக்ஷிப் போன்களின் வருகையை அடுத்து அதிலேயே வேரியன்ட்களை உருவாக்கி ஆப்பிள் போன் விலைக்கு நிகராக தனது நிறுவன போன்களின் விலையையும் உயர்த்தத் தொடங்கியது ஒன் பிளஸ். Smash the past என்பது ஒன் பிளஸ்-ன் மற்றொரு தாரக மந்திரம். முந்தைய மாடலின் சிறப்பை விட அடுத்த மாடலில் அதீத அப்டேட்களை உள்ளடக்கி போன்கள் வந்தாலும் அதற்கேற்றார் போல விலையும் பல மடங்கு உயரத் தொடங்கியது. இது ஒன் பிளஸ் வாடிக்கையாளர்களிடையே சற்று சலிப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாடல் போனை அறிமுகப்படுத்துவதற்கான உரிய கால இடைவெளியை எடுத்துக் கொள்ளாமல் அடுத்தடுத்து தனது சீரிஸ்களை வெளியிடத் தொடங்கியது ஒன் பிளஸ். அங்கு தான் சரியவும் தொடங்கியது.8, 8T, 8Pro ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தும் போதே சந்தையில் ஒன் பிளஸ் 9 சீரிசின் பேச்சு வேகமாக பரவியது. இது 8 சீரிசின் விற்பனையை கடுமையாக பாதித்தது. ஆனாலும் விடாமல் 9 சீரிசை அறிமுகப்படுத்தியது ஒன் பிளஸ். ஆனால் விலையோ ஆப்பிள் போனுக்கு கடுமையான போட்டி உருவாக்கும் அளவுக்கு இருந்தது. 9 சீரிஸ் – 9, 9R, 9Pro ஆகிய மாடல்கள் சந்தையில் களமிறக்கப்பட்டன. ஆனால் இவை வெளியிடப்பட்ட இதே நேரத்தில் போட்டிக்கு இதே தரம் மற்றும் சிறப்பம்சங்களுடன் மற்ற பிராண்டுகளும் தங்களது போன்களை களமிறக்கியதால் ஒன் பிளஸ்-க்கான போட்டி அதிகரித்தது. ஆனாலும், ஒன் பிளஸ் லவ்வர்கள் என உருவாகி இருந்த ஒரு தரப்பு போட்டி போட்டுக் கொண்டு தங்களை 9 சீரிசுக்கு அப்டேட் செய்து கொண்டார்கள். அதே நேரத்தில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை ஒன் பிளஸ் என்ற அதிருப்தி குரல்கள் பரலாக எழத் தொடங்கியது.

விலை அதிகம் தான் பிரச்சனையா ? இதோ தருகிறோம் பட்ஜெட் போன் என மீண்டும் கால இடைவெளி இன்றி களமிறக்கப்பட்டது தான் Nord Series. ஒன் பிளஸ் Nord, Nord 2 , Nord CE ஆகிய போன்களும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. பட்ஜெட் போன் தான் என்றாலும் ஒன் பிளஸ் தனது சிறப்புகளை முழுவதையும் இழந்து விட்டது. பெயரைத் தவிர வேறொன்றுமில்லை என்ற வாடிக்கையாளர்களை சொல்ல வைத்து விட்டது. எதுவெல்லாம் ஒன் பிளஸ்சின் தனித்துவங்கள் என பேசப்பட்டதோ அவை அனைத்தையும் விலை உயர்ந்த போன்களில் மட்டுமே வைத்துவிட்டு பட்ஜெட் போன்களை கடமைக்கு வெளியிட்டு வந்தது ஒன் பிளஸ். அதிலும் தனது தாய் நிறுவனமாக ஓப்போவுடன் முழுவதுமாக தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டது.

கேமரா, பில்ட் குவாலிடி, ஸ்லைடர் பட்டன், டர்போ -டைப் சி சார்ஜர் என பல ஏரியாக்களிலும் ஆதிக்கம் செலுத்திய ஒன் பிளஸ் படிப்படியாக இவற்றை குறைக்கத் தொடங்கியது. ஆம், தனது சிறப்புகளில் முக்கியமானதாக ஒன் பிளஸ் வைத்திருந்தது ஆப்ரேடிங் சிஸ்டம். சைனஜென் ஓஎஸ் தான் ஒன் பிளஸ்சின் தனித்துவம் என்றிருந்த நிலையில் அதிலிருந்து குறைந்து ஆக்சிஜன் ஒஎஸ் வந்த ஒன் பிளஸ், அங்கிருந்து கீழிறங்கி முழுவதுமாக ஒப்போவின் கலர் ஓஎஸ் என்ற நிலைக்க இறங்கி விட்டது.

தொழில்நுட்ப ரீதியாக எல்லா ஏரியாக்களிலும் சமரசம் செய்து கொள்ளத் தொடங்கிய ஒன் பிளஸ் ஒட்டுமொத்தமாக தனது தரத்திலும் பெருமளவு சமரசம் செய்து கொண்டது. இதுவே வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒன் பிளஸ் கட்டி வைத்திருந்த பிரம்மாண்ட கோட்டை சரியத் தொடங்குவதற்கு முக்கிய காரணம்.

இதனிடேயே ஒன் பிளஸ் தனது உப தயாரிப்புகளான டிவி, ஸ்மார்ட் வாட்ச், ஹெட்போன்ஸ் போன்றவற்றிலும் கவனம் செலுத்தி அந்த சந்தைகளிலும் தனது முந்தைய நற்பெயரை பயன்படுத்தி கணிசமான வாடிக்கையாளர்களை தன்பக்கம் இழுத்தது. ஆனாலும் மற்ற நிறுவனங்களோடு சரிக்கு சரியாக போட்டி போட முடியாத நிலை உருவானது. ஆனால், தயாரிப்பு ஒத்துழைப்பை மட்டுமே கடனாக பெற்ற செயல்பட்டு வந்த ஒன் பிளஸ் நிறுவனம் முழுவதுமாக தன்னை ஓப்போ நிறுவனத்துக்கு தாரை வார்த்து விட ஒன் பிளஸ் நிறுவனத்தின் முக்கிய CEO –க்கள் சிலர் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட்டனர்.

ஸ்மார்ட்போன் சந்தையில் ப்ரீமியம் போன்கள் வழங்குவதில் முதல் இடத்தில் இருந்த ஒன் பிளஸ் அதன் இடத்தை தவற விட்டு விட்டதாக, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவுக்கான புதிய CEO வை நியமித்துள்ள ஒன் பிளஸ் நிறுவனம் ஊரடங்கு காலத்தில் தவற விட்ட தனது இடத்தை மீண்டும் பிடிப்பதற்கான முயற்சியில் இறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரம் கணிசமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்க உள்ளதாக கூறியுள்ளது.

தனித்துவமான சிறப்பம்சங்களை தர மறுத்து விலைக்கு ஏற்றார்போல வசதிகளை மாற்றியமைக்கத் தொடங்கியதால் ஒன் பிளஸ்-க்கு வந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வந்ததை விட பன்மடங்கு வேகத்தில் திரும்பத் தொடங்கி உள்ளது. மீண்டும் தனக்கான இடத்தை ஒன் பிளஸ் சந்தையில் ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தற்போது உருவாகி உள்ள மற்ற நிறுவனங்களின் கடுமையான போட்டி அதற்கு இடம் கொடுக்கமா என்பது பெருத்த சந்தேகமே.

மொத்தத்தில் தற்போது ஒன் பிளஸ் தனது அடையாளத்தை இழந்துள்ளதன் மூலம் அதன் தாய் நிறுவனமான ஓப்போவின் பெயரோடு ஓப்போ பிளஸ் ஆக மாறி வருகிறது. 2013 ஐ ஒப்பிடுகையில் 2021 ல் சராசரியாக 300 மடங்கு யூடியூப் ரிவீயூவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. எனவே இவர்களின் கண்ணில் மண்ணைத் தூவி வாடிக்கையாளரிடம் போய் சேர்ந்து விடலாம் என்று எண்ணினால் அது வெறும் கனவாகவே முடியும்.
Published by:Esakki Raja
First published:

Tags: One plus, OPPO

அடுத்த செய்தி