இந்தியாவில் பட்ஜெட் விலை கொண்ட ஸ்மார்ட்ஃபோன் பிரிவு வியாபாரத்தில் சீன தயாரிப்பு நிறுவனங்கள் தான் சுமார் 80 சதவீதம் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனால், உள்நாட்டு ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிதாக வளர்ச்சி அடைய முடியவில்லை. இந்த நிலையில், ரூ.12,000 வரை விலை மதிப்பு கொண்ட, சீன நிறுவனங்களில் பட்ஜெட் ஃபோன்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், இப்படி தடை விதிப்பதன் மூலமாக உள்நாட்டு ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா போன்றவை பலன் அடைய முடியுமா என்பது குறித்து நிபுணர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு நிறுவனங்களால் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம்
சீன பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன்களுக்கு தடை விதிப்பதன் மூலமாக, குறுகிய காலத்திற்குள் மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா போன்ற நிறுவனங்கள் பலன் அடைய முடியாது என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இதுகுறித்து ஐடிசி இந்தியா நிறுவனத்தின், சாதனங்கள் ஆராய்ச்சிப் பிரிவு துணைத் தலைவர் நவகேந்தர் சிங் கூறுகையில், “இன்றைக்கு உள்ள சூழல்களை ஆராய்ந்து பார்த்தால், இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பலன் கிடைக்காது. ஏனென்றால் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்ஃபோன் வாங்க நினைக்கும் அதிகப்படியான வாடிக்கையாளர்களின் தேவை பூர்த்தி செய்யும் திறனோ அல்லது உற்பத்தி தளங்களோ இங்குள்ள நிறுவனங்களுக்கு கிடையாது. அதே சமயம், இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக் கொண்டு, இந்த நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும், முதலீடுகளையும் செய்தார்கள் என்றால், நிச்சயமாக அவர்கள் பலன் பெற முடியும்’’ என்று தெரிவித்தார்.
தடை ஏற்பட வாய்ப்பில்லை
சீன பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன்களுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று மற்றொரு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் தருண் பதக் தெரிவித்துள்ளார். அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் அது ஸ்மார்ட்ஃபோன் மார்க்கெட்டை மிக கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
5 இல் 4 ஃபோன்கள் சீனாவை சேர்ந்தவை
தற்போது சந்தையில் உள்ள பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன்களை எடுத்துக் கொண்டால் 5 இல் 4 ஃபோன்கள் சீன நிறுவனத்தின் தயாரிப்புகளாக உள்ளன. குறிப்பாக ஸியோமி, விவோ, ரியல்மீ போன்ற நிறுவனங்கள் சுமார் 80 சதவீத மார்க்கெட்டை தக்க வைத்துள்ளன. இந்த சூழலில், சீன நிறுவன தயாரிப்புகளுக்கு தடை விதிப்பதால், சந்தையில் ஸ்மார்ஃபோன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், 5ஜி ஃபோன்களை கிடைக்கச் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read : ஸ்மார்ட்வாட்ச் மார்க்கெட்டில் சீனாவை வீழ்த்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்தியா.!
வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு
பட்ஜெட் விலையில், சீன தயாரிப்பு ஃபோன்களுக்கு தடை விதிக்கப்பட்டால் நியாயமான விலையில் பெரிய ஸ்கிரீன், அதிக பேட்டரி திறன், அதிக ரிஃப்ரெஷ் ரேட் போன்ற ஃபோன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காத சூழல் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, Mobile phone, Technology