மெட்ரோ இரயிலில் பயணம் செய்வது என்பதே பலருக்கும் பிடித்தமான ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். இதை விடவும் சிறப்பான அனுபவத்தைப் பெற நீருக்கடியில் உள்ள மெட்ரோ இரயில் பயணத்தை மேற்கொண்டு பாருங்கள். மிக அற்புதமான ஒரு அனுபவத்தை இது தரும். இப்படியொரு சிறந்த பயணத்தை அனுபவிக்க நீங்கள் செல்ல வேண்டிய இடம் தான் கொல்கத்தாவில் நீருக்கடியில் தொடங்கப் போகிற மெட்ரோ ரயில் பயணம். இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை.
2023 ஆம் ஆண்டுக்குள் கொல்கத்தாவில் முதன்முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயிலை விரைவில் தொடங்க உள்ளனர் என்பதால், இந்திய மக்கள் முன்னெப்போதும் இல்லாத அனுபவத்தைச் சீக்கிரமே பெறக் கூடும். கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (KMRC) ஹூக்ளி ஆற்றின் கீழ் மெட்ரோ இணைப்புக்கான நாட்டின் முதல் நீருக்கடியில் உருவாக உள்ள சுரங்கப்பாதையைக் கட்டி முடிக்க உள்ளது. இது ஹவுரா மற்றும் கொல்கத்தா இடையே செயல்படும். கிழக்கு மற்றும் மேற்கு மெட்ரோ வழித்தடங்கள் இந்த இரட்டை சுரங்கப்பாதை வழியாக 500 மீட்டருக்கு மேல் இணைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நீருக்கடியில் கட்டப்படும் மெட்ரோ சுரங்கப்பாதை பயணம் பற்றி மேலும் சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ.
Also Read:வியக்க வைக்கும் விந்தை இசை கருவிகள்...
நீருக்கடியில் மெட்ரோ திட்டம் :
16.6 கிமீ நீளமுள்ள கிழக்கு-மேற்கு நடைபாதையில், 520 மீட்டர் ஹூக்ளி ஆற்றின் ஆற்றுப் படுகையின் கீழ் இந்த மெட்ரோ சுரங்கப் பாதை அமையவுள்ளது. மேலும் இந்த சுரங்கப்பாதையானது தாழ்வாரம் ஆற்றுப்படுகைக்குக் கீழே 33 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு கொல்கத்தாவை ஹவுராவுடன் இணைக்கக் கூடியது. சுரங்கப்பாதையில் 1.4 மீ அகலமுள்ள கான்கிரீட் வளையங்கள் மற்றும் நீர் சுரங்கப்பாதைக்குள் நுழைவதைத் தடுக்க ஹைட்ரோஃபிலிக் கேஸ்கட்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ இணைப்பானது செக்டார் V முதல் ஹவுரா வரையிலான பயண நேரத்தைக் குறைக்க உதவும். நீருக்கடியில் 10-அடுக்கு அமைப்பிற்குச் சமமான ஆழத்தில் இந்த மெட்ரோ ரயில் இயக்கப்படுமாம்.
இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையவுள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையாக இருக்கும். மேலும் இது லண்டனை பாரிஸுடன் இணைக்கும் யூரோஸ்டாருக்கு இணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெட்ரோ திட்டமானது ஹூக்ளி ஆற்றின் அருகே வசிக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் என்றும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் உதவும் என்றும் கணிக்கப்படுகிறது.
Also Read:சம்பளம் வாங்காமல் ரஜினிகாந்த் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம்
பாதுகாப்பு வசதிகள்:
இந்த மெட்ரோ இரயில் திட்டத்தில் வழங்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த திட்டத்தின் தள மேற்பார்வையாளர் மிதுன் கோஷ் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துக் கொண்டார். அதில், அவசரக் காலங்களில் பயணிகளை வெளியேற்றுவதற்காகச் சுரங்கப்பாதைகளில் நடைபாதைகள் இருக்கும் என்றும், நீர் சுரங்கப்பாதை பகுதிக்குள் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப கோளாறுகளைக் கருத்தில் கொண்டு பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். எனவே இதுபோன்ற சூழ்நிலையில் பயணிகள் வெளியேறச் சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சுரங்கப்பாதையின் செலவு:
இந்த புதுமையான நீருக்கடியில் இயங்க உள்ள மெட்ரோ இரயில் திட்டமானது சாதாரண மெட்ரோ இரயில் திட்டத்தைக் காட்டிலும் அதிக செலவுகளைக் கொண்டதாக இருக்கும். அதன்படி, இந்த திட்டத்திற்கான செலவு என்பது ரூ.8,600 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டமானது 2023-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kolkata, Metro Rail