பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவில் ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. 2019ம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் தலைகாட்டத் தொடங்கிய கொரோனா தொற்றால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாததால் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கினர். அதற்கு கூகுள் பே, ஃபோன் பே, பே டிம் போன்ற ஆன்லைன் பணபரிமாற்ற தளங்கள் உதவின.
இந்தியாவில் பல்வேறு ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் பிரதான பயன்பாடாக கூகுள் பே செயலி உள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் செயலியான கூகுள் பே தற்போது புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பணப்பரிமாற்றத்தை மேலும் எளிதாக்கும் வண்ணம், டேப் டூ பே என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெரும்பாலான கடைகளில் கார்டு பேமெண்ட் இயந்திரங்களில் உள்ள POS டெர்மினலில் தங்கள் ஸ்மார்ட்போன்களைத் தட்டுவதன் மூலம் கூகுள் பே யூஸர்கள் இனி பணம் செலுத்த முடியும். பைன் லேப் உடன் இணைந்து கூகுள் பே இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த வசதி ஆண்ட்ராய்டு போன்களில் NFC வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும்.
டேப்-டூ-பே அம்சத்தை முதலில் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது ஸ்டார்பக்ஸ் அவுட்லெட்டுகள், ஃபியூச்சர் ரீடெய்ல் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பிற வணிகர்களில் பயன்படுத்த விரிவாக்கப்பட்டுள்ளது.
பைன் லேப்ஸின் தலைமை வணிக அதிகாரி குஷ் மெஹ்ரா கூறுகையில், "இந்தியாவில் 2021ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மட்டும் ரூ.8.26 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளுடன், UPI பேமெண்ட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கூகுள் பே ஒத்துழைப்புடன் கொண்டு வரப்பட்டுள்ள டேப் டூ பே முறை UPI பேமெண்ட்டை மேலும் வலுப்படுத்தும். காண்டாக்ட்லெஸ் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை விரும்பும் இளைஞர்களை ஈர்க்கும் என நாங்கள் நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read : ஆன்லைன் ஹேக்கர்கள் எந்தெந்த வழிகளில் உங்கள் பணத்தை திருடக்கூடும் - ஆர்பிஐ எச்சரிக்கை
உங்கள் ஃபோனில் NFC உள்ளதா என்பதை எப்படிச் சரிபார்ப்பது.?
• உங்கள் ஸ்மார்ட் போனில் செட்டிங்கை திறக்கவும்.
• "NFC" என்பதை சர்ச் செய்யுங்கள். பொதுவாக பெரும்பாலான ஆன்ட்ராய்டு போன்களில் "நெட்வொர்க் மற்றும் இணைப்புகள்” பிரிவில் காணலாம், இருப்பினும் ஆன்ட்ராய்டு போன் தயாரிப்புகள் வேறுபடும் என்பதால் தேடுவது சிறப்பானது.
• உங்கள் தொலைபேசியில் NFC இருந்தால், அது தேடல் முடிவுகளில் காண்பிக்கப்படும்.
• NFCக்குச் சென்று, அது இயங்குவதற்கான அனுமதியை OK செய்யவும்.
• உங்களால் NFC மெனுவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து டேப் டூ பே முறைய பயன்படுத்த முடியாது.
Also Read : வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பயன்படுத்தும் அம்சம் அறிமுகம்!
கூகுள் பே ‘டேப் டூ பே’ (Tap to pay) செயல்பாடு:
• டேப் செய்ய முதலில், ஸ்மார்ட் போனை அன்லாக் செய்யுங்கள்.
• பைன் லேப் டெர்மினலில் உங்கள் மொபைலை டேப் செய்யுங்கள்.
• Google Pay ஆப் தானாகவே திறக்கும்.
• செலுத்த வேண்டிய தொகையைச் சரிபார்த்து, Proceed என்பதைக் கிளிக் செய்யவும்.
• பணம் செலுத்தப்பட்டதற்கான Notification கிடைக்கப்பெறும்.
மேலும் யூபிஐ பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கான ஸ்டெப்களின் எண்ணிக்கையை கூகுள் பே குறைத்திருக்கிறது. தற்போது வரை முழுமையாக இந்த அம்சம் பயனர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.