முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / உலகிலேயே அதிக பாதுகாப்புகள் கொண்ட அமெரிக்க அதிபர் பயணிக்கும் அதிநவீன கார்... மிரளவைக்கும் சிறப்பம்சங்கள்

உலகிலேயே அதிக பாதுகாப்புகள் கொண்ட அமெரிக்க அதிபர் பயணிக்கும் அதிநவீன கார்... மிரளவைக்கும் சிறப்பம்சங்கள்

  • Last Updated :

உலகிலேயே அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வாகனமாக கருதப்படுவது அமெரிக்க அதிபர்கள் பயணிக்கும் விமானமும், காரும் தான். அதிபர் டிரம்ப் பயன்படுத்தும் காரின் சிறப்புகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், விமானம் மூலம் குஜராத் வந்தவுடன் மோட்டேரா மைதானத்திற்கு BEAST என பெயரிடப்பட்ட தனது காரில் செல்கிறார். ஆர்மர்டு லிமோசின் (ARMOURED LIMOUSINE) வகையைச் சேர்ந்த இந்த கவச வாகனத்தை, 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, காடிலக் லிமோசின் வகை காரை பயன்படுத்தி வந்தார். இது 1920- ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

டிரம்ப் பயன்படுத்தும் ARMOURED LIMOUSINE வகை காரின் ஜன்னல்கள் 5 அடுக்கு கண்ணாடியும் பாலிகார்பனேட்டும் கொண்டவை. குண்டு துளைக்காத இந்த கண்ணாடிகளை ஓட்டுனர் அமர்ந்திருக்கும் இடத்தில் மட்டுமே திறக்க முடியும். அதுவும் 3 அங்குலம் மட்டுமே கீழே இறங்கும்

ARMOURED LIMOUSINE காரில், ஆபத்து நேரங்களில் வெளியாகும் சிறு துப்பாக்கிகள் உள்ளன. மேலும் கண்ணீர் புகை குண்டுகள், அதிபருக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட ரத்தம் ஆகியவையும் வைக்கப்பட்டிருக்கும். ஓட்டுநரின் அறையில், தொலைத்தொடர்பு மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்பட்டிருக்கும்

காரின் மையப் பகுதியானது ஸ்டீல், டைட்டானியம், அலுமினியம் மற்றும் செராமிக்கினால் 5 அங்குல தடிமத்துடன் உருவாக்கப்பட்டது. காரின் முன்பகுதியில் கண்ணீர் புகைக் குண்டுகளை ஏவும் கருவிகள் மற்றும் இரவிலும் தெளிவாக பார்க்கக் கூடிய கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

காரின் ஓட்டுநர், அமெரிக்காவின் secret service ஏஜெண்டுகளிடம் பயிற்சி பெற்றவராக இருப்பார். எந்த ஆபத்திலிருந்தும் தப்பிக்கும் வகையில் பயிற்சி பெற்றவராகவும், காரை 360 டிகிரி அளவிற்கு திருப்பும் திறன் கொண்டவராகவும் இருப்பார். காரின் பின்புறத்தில், பென்டகன் மற்றும் அமெரிக்க துணை அதிபரை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் சாட்டிலைட் தொலைபேசி இணைக்கப்பட்டிருக்கும். மேலும், தீ பற்றுவதைத் தடுக்கும் விதமான நுரையுடனும், குண்டு துளைக்காத வகையிலும் பெட்ரோல் டேங்க் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

காரின் பின்புறம், அதிபரை தவிர, மேலும் 4 பேர் அமரும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநருக்கும் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் இடையில், கண்ணாடி தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். இதனை அதிபர் மட்டுமே கீழே இறக்க முடியும். அங்கு அபாய பட்டன் ஒன்றும், தன்னிச்சையான சுவாச கருவியும் பொருத்தப்பட்டிருக்கும்.

காரின் கதவுகள் 8 அங்குலம் தடிமன் கொண்டவை. போயிங் 757 விமானத்தின் கதவுகளுக்கு இணையான எடை கொண்டவை. கதவை மூடும் பட்சத்தில் கார் 100 சதவிகிதம் அடைத்துக்கொள்ளும் இவை வேதியியல் ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

துளையிட முடியாத கெவ்லர் சிந்தடிக்கால் ஆன டயர்கள், சாதாரண டயர்களை விட ஐந்து மடங்கு வலிமைவாய்ந்தவை. டயர் வெடித்தால் கூட, எந்தவித சலனமும் இன்றி கார் இயங்கும். குண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் காரின் சாசீஸ் என்று அழைக்கப்படும் அடிச்சட்டம் அமைக்கப்பட்டிருக்கும்.

அதிபரின் பாதுகாப்புக்காக வரும் வாகனங்களும் BEAST -க்கு இணையான தொழில்நுட்பத்தை கொண்டவை. HAZMAT, ROADRUNNER, WATCHTOWER, CAT, HALFBACK என்பவை அவை. இதில் HAZMAT- என்பது கறுப்பு நிற டிரக்காகும் இவை அணு, வேதியியல் மற்றும் உயிரியல் ஆயுதங்களை கண்டுபிடிக்கும் வல்லமை பெற்றவை.

ROADRUNNER என்பவை பொதுவாக அதிபர், வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஆகியோரை தொடர்பில் வைத்துக்கொள்ளும். ENCRYPTED VOICE என்ற குறியாக்கப்பட்ட குரல் மூலமே இந்த தகவல் பரிமாற்றம் நடைபெறும். WATCHTOWER, CAT, HALFBACK வாகனங்களும் அதிபரை பாதுகாக்க மிக நவீன தொழில்நுட்பங்களுடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை.

top videos

    First published:

    Tags: Trump India Visit