உங்கள் கைக்குள் ஒரு ரோபோ வந்தால் எப்படி இருக்கும்? நீங்கள் கேட்கும் கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில்களை எளிதாக உடனுக்குடன் கொடுத்தால் எப்படி இருக்கும்? பரவலாக பேசப்பட்டு வரக்கூடிய ChatGPT குறித்தும் செயற்கை நுண்ணறிவு குறித்தும் இந்த கட்டுரையில் ஆழமாக தெரிந்துகொள்வோம்.
ChatGPT குறித்து தெரிந்துகொள்வதற்குள் முதலில் AI எனப்படும் Artificial Intelligence குறித்து தெரிந்துகொள்வோம். செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியல் உலகத்தில் மேம்பட்ட வளர்ச்சியின் உச்சநிலை. அதாவது, செயற்கை அறிவாற்றல் என்பது கொடுக்கப்படும் உள்ளீட்டுக்கு தகுந்தார்போல தானாகவே செயல்படும் செயற்கை நுண்ணறிவு. அந்த உள்ளீட்டை கொடுப்பது மனிதன் என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மேலும், நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போலவே செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம்.
உலகில் எத்தனை செயற்கை நுண்ணறிவுகள் இருக்கின்றன என்பதற்கான சரியான தரவுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஏனென்றால், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் வளர்ச்சி தொடர்ந்து உருவாகி அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பம் நிமிடத்திற்கு நிமிடம் முன்னேறி மேலும் பரவலாக மனித குலத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதால் அது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகிறது. எளிதான விஷயங்களில் இருந்து சிக்கலான, ஆழமான கற்றல் விஷயங்கள் வரை கொடுக்கும் தன்மை உடையது. அதனால், தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு ஆரோக்கியம், போக்குவரத்து, நிதி, பொழுதுபோக்கு என பல்வேறு துறைகளில் உருவாக்கப்பட்டு வருகிறது, பயன்பாட்டிலும் உள்ளது.
செயற்கை நுண்ணறிவில் மனிதர்களின் பங்கு:
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் மனிதர்கள் பல வழிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறிப்பாக, ஆராய்ச்சி, மேம்பாடு, தரவு சேகரிப்பு மற்றும் தயாரித்தல். செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களுக்கு பயிற்சியளிக்க அதிகளவு தரவு தேவைப்படுகிறது. இந்த தரவுகளை சேகரித்து தயாரிக்க மனிதர்கள் பங்கு மிக முக்கியம். செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை வடிவமைத்து அதை வரிசைப்படுத்தி அதன் நோக்கங்களை தீர்மானித்து, நிஜ உலகத்தோடு அவைகளை எப்படி தொடர்புபடுத்த வேண்டும் என இப்படியான விஷயங்களை செய்வது மனிதர்களின் பொறுப்பு. அதுமட்டும் இல்லாமல் இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை கண்காணிப்பதும் பராமரிப்பதும் மனிதர்கள்தான். ஆக, செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பல பணிகளை தானாகவே முடிவெடுக்க முடியும் என்றாலும், அதனை உருவாக்க, வரிசைப்படுத்தி மேற்பார்வை செய்ய அவை இன்னும் மனிதர்களையே நம்பியிருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ChatGPT:
கடந்த நவம்பர் மாதம் அறிமுகமான இந்த செயற்கை நுண்ணறிவை OpenAI தயாரித்துள்ளது. ChatGPT என்பது ஒரு AI மொழி. அதாவது, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும், தகவல்களை வழங்கும், உரையாடல்களில் கூட ஈடுபடும். மனிதனால் உள்ளீடு கொடுக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு கொடுக்கும்; கூகுள் செயல்பாடு போலவே. சரி, கூகுளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், கூகுளிடம் நீங்கள் எதையாவது கேட்டால், நீங்கள் கேட்ட தரவுகள் இதில் உள்ளதா என்பதை பார்த்து எடுத்துக்கொள்ள சொல்லி அதுவே உங்கள் முன் உங்களின் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு ஏற்ப தகவல்களை ஆப்ஷன்ஸ் போல கொடுத்துவிடும். ஆனால், ChatGPT நீங்கள் கேட்கும் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு அது தொடர்பான ஆப்ஷன்களை கொடுக்காமல் நேரடியாக அது தன்னுடைய பதிலை கொடுக்கிறது. இப்படிதான் ChatGPT செயல்படுகிறது.
இந்தியாவில் உள்ள சில கல்லூரிகள் உட்பட வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வரை இந்த ChatGPT-ஐ தடை செய்கின்றன. காரணம், மாணவர்களின் செயல்திறன், அறிவுசார் பாதிப்பை ChatGPT ஏற்படுத்துகிறது என கருதுகின்றனர். மாணவர்கள் தேர்வுகளில் ஏமாற்ற வாய்ப்புள்ளது எனவும், அல்லது அவர்களின் கட்டுரைகளில் அசல் தன்மை என்பது ChatGPT போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதால் ஒன்றுமில்லாமல் போகும் என கல்வியாளர்கள் கருதுவதாக ஒரு தரப்பு சொல்கிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு கருவிகளின் வருகையும் அவற்றின் இயல்பான பயன்பாடும் மாணவர்களிடையே 'Critical Thinking'-ன் சிதைவுக்கு வழிவகுக்கும் என சிலர் நம்புகின்றனர். மறுபுறம், இளைஞர்களிடையே தேடல் குறைந்துவிடும் எனவும் ஒரு தரப்பு நம்புவதாக தெரிகிறது. ஆனால், இன்னொரு தரப்பு, அப்படியெல்லாம் இல்லை, தேடல் இருப்பவர்கள் தேடிபிடித்து படிக்கதான் போகின்றனர் என அவர்களின் கருத்தை முன்வைக்கின்றனர்.
மற்றொரு பரவலான விஷயம், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவுகள் வேலையிழப்புக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், எந்தவொரு தொழில்நுட்பத்தைப் போலவே நிறுவனங்கள் இந்த கருவிகளை பயன்படுத்துவதால் குறுகிய காலத்தில் சில வேலை இடமாற்றங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், நீண்ட காலத்திற்கு இந்த தொழில்நுட்பங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும் எனவும், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் மேம்பாடு மற்றும் பராமரிப்பு போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் கணிக்கப்படுகிறது. மேலும், வேலைவாய்ப்பின் மீதான தாக்கமும் பாசிட்டிவாக இருக்கும் என கூறுகின்றனர்.
OpenAI-ன் ChatGPT-யை அடுத்து கூகுள் தன்னுடைய சொந்த செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை வெளியிடுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, ChatGPT-க்கு போட்டியாக 'Code Red' எனும் செயற்கை நுண்ணறிவு தயாரிக்கும் முயற்சியில் கடினமாகவும் வேகமாகவும் கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என சீனாவும் மறுபுறம் அவர்கள் நாட்டில் செயற்கை நுண்ணறிவு தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். வரும் மார்ச் மாதத்தில் சீனாவில் ஒரு Chatbot சேவை அறிமுகம் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. சீனாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமான Baidu முதலில் இந்த செயற்கை நுண்ணறிவை ஒரு தனிப்பட்ட அப்ளிகேஷனாக அறிமுகம் செய்யும் எனவும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சீனாவின் Search Engine-னுடன் இது இணைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ChatGPT எவ்வாறு செயல்படுகிறதோ, அதேபோல பயனர்களின் கேள்விகளுக்கு வலைத்தள இணைப்புகளை வழங்காமல் பதில்களை நேரடியாக வழங்கும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Artificial Intelligence, ChatGPT, Google, Technology