இந்திய அளவிலும் தமிழக அளவிலும் அவ்வப்போது நிரலாக்கப் போட்டி எனப்படும் ஹேக்கத்தான் நடப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். அதில் அரிதாகவே தமிழ்க் கணினி தொடர்பான போட்டிகள் நடைபெறும். அப்படிப்பட்ட ஒரு போட்டியைத் தான் பன்னாட்டளவில் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்துடன் (உத்தமம்) இணைந்து 2021 மார்ச் 5,6,7 ஆகிய நாட்களில் இணையம் வழியாக நடத்துகிறது.
இந்த நிரலாக்கப் போட்டியில் தமிழ்க் கலை, இலக்கியம், விக்கித்திட்டம் தொடர்பானவை, கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்துடன் (உத்தமம்) இணைந்து 2021 மார்ச் 5,6,7 ஆகிய நாட்களில் இணையம்வழியாக நடத்துகிறது. உரிய தலைப்புகளில் மாணவர்கள் தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.
போட்டிக்குப் பல சிக்கல் கூறுகள் (problem statements) பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றிற்கு மாணவர்களால் முடிந்த செயலியையோ, மென்பொருளையோ அல்லது செயல்படக்கூடிய முன்வடிவையோ (prototype) உருவாக்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தப் பரிசாக 30,000 ரூபாயும், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழும் வழங்குகிறார்கள். மாணவர்களின் படைப்பாற்றல் போட்டிக்கு மட்டுமல்லாமல் தமிழ்கூறும் நல்லுலகிற்கும் பயன்படும் வகையில் சவால்கள் உள்ளன.
இன்று நாம் பயன்படுத்தும் இணையம் முதல் விசைப்பலகை வரை அனைத்தும் யாரோ ஒருவரின் கற்பனை தான் செயல்வடிவம் பெற்று, பொருள் வடிவம் அடைந்துள்ளன. அதனால் தான் முழுமையான கல்வியென்பது புத்தகத்திற்கு வெளியே உள்ளது என்கிறோம். அந்த வகையில் மாணவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்தவும் புத்தாக்கங்களை அதிகரிக்கவும் அறிவியல் சார்ந்து அல்லது நிரலாக்கம் சார்ந்து போட்டிகள் நடப்பதுண்டு. அதாவது சில சிக்கல்களை முன் வைத்து அதற்குத் தொழில்நுட்பத் தீர்வை உருவாக்கும் போட்டியாக இருக்கும்.
கூடுதலாகத் துறை வல்லுநர்கள் உதவியும் வழிகாட்டலும் செய்வதால் மாணவர்களால் சிறப்பான புத்தாக்கத்தைப் படைக்கவும் முடியும். பணி அனுபவமில்லாத கல்லூரி மாணவர்களுக்கு இவ்வகை செயல்பாடுகள் ஓர் அறிமுக அட்டை போலவும் திறனை மதிப்பிடும் கருவி போலவுமிருந்து வேலைவாய்ப்பிற்கு உதவும்.
இணையத்தில் இவையெல்லாம் தமிழிலில் இல்லையே, தமிழுக்கு இல்லையே என எத்தனையோ தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்த்திருப்போம். அத்தகையவற்றை நம் தமிழில் கொண்டு வர நம் மாணவர்களை ஊக்கப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
தற்காப்புக் கலைகள், ஓவியம், சமையல், இசை போன்று அனைத்துத் தமிழ்க் கலைகளை நவீனப்படுத்தவும், கணினிக்குக் கொண்டுவரவும் சுவாரஸ்யமான தலைப்புகள் உள்ளன. அது போலத் தமிழ் இலக்கணம் முதல் இலக்கியம் வரை மொழிக் கருவிகள் உருவாக்கக்கூடிய சவால்களும் உள்ளன. இவ்விரண்டு மட்டுமல்லாமல் கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியாவும் அது சார்ந்த திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழுக்கான தீர்வையும் கொண்டுவரலாம்.
போட்டி மட்டுமல்லாமல் வல்லுநர்களின் பயிற்சியும் வழிகாட்டல்களும் உள்ளதால் மாணவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் இரண்டு முதல் நான்கு நபர் கொண்ட அணியாகக் கலந்து கொள்ள வேண்டும். முன்பதிவிற்குக் கடைசி நாள் பிப்ரவரி 25 ஆகும். எந்தத் துறை மாணவராக இருந்தால், எந்தக் கல்லூரியாக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இதில் கலந்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
https://tmfa-gct.com/Niralkalam இந்த இணைப்பில் சென்று பதிவு செய்துகொள்ளலாம்.
சர்வதேச அளவில் தமிழ்த் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெறுவது தமிழின் பெருமையை மட்டும் சுட்டிக் காட்டவில்லை இளம் தலைமுறையினருக்குள்ள கடமையையும் சுட்டிக்காட்டுகிறது.