டிராய் (Trai) என்று நன்கு அறியபப்டும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஒரு புதிய ஆப்பை உருவாக்கி வருகிறது, இது ட்ரூகாலர் ஆப்பை போலவே அறியாத அல்லது தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்பாளர்களின் பெயரை பெறுநரின் மொபைல் ஸ்க்ரீனில் காட்சிப்படுத்த உதவுமாம்.
தற்போது வரையிலாக, நீங்கள் உங்களின் காண்டாக்ட் லிஸ்டில் சேமித்து வைத்து இருக்கும் எண்களில் இருந்து வரும் அழைப்புகளின் போது மட்டுமே குறிப்பிட்ட எண்ணில் இருந்து யார் அழைக்கிறார் என்கிற விவரம் உங்கள் மொபைல் ஸ்க்ரீனில் தோன்றும். ஆனால் ஒரு உயர் அதிகாரியை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி , ஒரு அழைப்பாளரின் கேஒய்சி (KYC) அடிப்படையிலான பெயரை மொபைல் ஸ்க்ரீன்களில் காட்சிப்படுத்துவதற்கான வழிமுறையை உருவாக்குவது குறித்து டிராய் விரைவில் ஆலோசனை செய்ய தொடங்கும்.
ஒரு தொலைபேசி எண் சேமிக்கப்படாவிட்டால், அழைப்பாளர்களை கண்டறிய உதவும் ட்ரூகாலர் (Truecaller) போன்ற ஆப்கள் இருந்தாலும் கூட அதுபோன்ற ஆப்பில் உள்ள பெரும்பாலான டேட்டாக்கள் 'க்ரவுட் சோர்சஸ்டு' என்பதால் அதில் சில வரம்புகள் உள்ளதால் அரசாங்கத்தின் கேஒய்சி அடிப்படையிலான இந்த நடவடிக்கை இன்னும் துல்லியமானதாக, சிறப்பானதாக இருக்கலாம். .
Read More : பாஸ்வேர்டு மாற்ற வேண்டிய தேவை குறித்து பயனாளர்களுக்கு நினைவுபடுத்தும் Google Assistant.!
தொலைத் தொடர்புத் துறையிலிருந்து (Department of Telecom - DoT) ஆலோசனையைத் தொடங்குவதற்கு டிராய்க்கு ஒரு குறிப்பு கிடைத்துள்ளதாகவும் பிடிஐ குறிப்பிடுகிறது. இதற்கான கலந்தாய்வு ஓரிரு மாதங்களில் தொடங்கும் எனவும் டிராய் தலைவர் பிடி வகேலா தெரிவித்து உள்ளார். "விரைவில் இதற்கான வேலையைத் தொடங்குவோம்.
தெரியாத எண்களில் இருந்து யாராவது கால் செய்யும்போது கேஒய்சி அடிப்படையின்படி அவர்களின் பெயர் தோன்றும்’ என்று வகேலா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறி உள்ளார். மேலும் "டிடி விதிமுறைகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்களால் செய்யப்பட்ட கேஒய்சி-க்கு இணங்க, மொபைல் ஸ்க்ரீனில் பெயர் தோன்றுவதற்கு இந்த வழிமுறை உதவும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கம் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள், ஸ்பேம் கால்களை எதிர்த்துப் போராட கடுமையாக முயற்சித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை முழு கால் நெட்வொர்க்கிலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் இந்த நடவடிக்கை வளர்ச்சியிலேயே தான் உள்ளது என்பதால், இது சரியாக எப்போது வெளியாகும் என்பதில் தெளிவு இல்லை மற்றும் முழுமையாக இது முடிய பல ஆண்டுகள் ஆகலாம்.
கேஒய்சி அடிப்படையிலான 'காலர் ஐடி' மெக்கானிசம் ஆனது ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மோசடிகளின் அதிகரித்து வரும் நிகழ்வுகளுக்கு எதிராக யூசர்களைப் பாதுகாக்கும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
இதற்கிடையில், ஒரு மின்னஞ்சல் அறிக்கை வழியாக ட்ரூகாலர் நிறுவனம், “காண்டாக்ட்களைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் மாற்றுவதற்கான எந்தவொரு மற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். ஸ்பேம் மற்றும் ஸ்கேம் கால்களின் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர ஒரு எண்ணை அடையாளம் காண்பது மிகவும் முக்கியம். மேலும் ட்ரூகாலர் கடந்த 13 ஆண்டுகளாக இந்த முக்கியமான பணியை நோக்கி அயராது உழைத்து வருகிறது. டிராய் அறிவித்துள்ள இந்த நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம். மேலும் இதற்கும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் நாங்கள் மிகவும் ஆதரவாக இருக்கிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்’ என்று கூறி உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.