நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை (IT rules) பின்பற்ற ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒரு கடைசி வாய்ப்பை வழங்கி உள்ளது. வரும் ஜூலை 4-ஆம் தேதிக்குள் இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க ட்விட்டருக்கு மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்து உள்ளது.
கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் (ஜூலை 4-ஆம் தேதிக்குள்) அனைத்து புதிய தகவல் தொழில்நுட்ப விதி தொடர்பான உத்தரவுகளுக்கும் இணங்குமாறு ட்விட்டர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி அமைச்சகம் ஜூலை 4 வரை கொடுத்துள்ள காலக்கெடுவிற்குள் ட்விட்டர் இந்தியா புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்காவிடில் அதன் intermediary ஸ்டேட்டஸை நிறுவனம் இழக்க நேரிடும். இதன் பொருள் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு வரும் சட்டபாதுகாப்பு விலக்கி கொள்ளப்படும், மேலும் ட்விட்டரில் யூஸர்கள் வெளியிடும் அனைத்து கருத்துக்களுக்கும் நிறுவனம் மட்டுமே பொறுப்பாக நேரிடும்.
ஜூன் 27 அன்று ட்விட்டருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் இதுநாள் வரை வெளியிடப்பட்ட அனைத்து அரசு உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டும் என்று ட்விட்டருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுவே இந்த விவகாரத்தில் இறுதி அறிவிப்பு என்றும் அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சோஷியல் மீடியாக்களில் போலி செய்திகள் ஷேர் செய்யப்படுவதை தடுக்கவும், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் ஷேராவதை தடுக்கும் நோக்கிலும் சோஷியல் மீடியாக்கள் மற்றும் ஓடிடி பிளாட்ஃபார்ம்களுக்கு புதிய வழிகாட்டு விதிகளை மத்திய அரசு கொண்டுவந்தது. சோஷியல் மீடியா நிறுவனங்கள் ஒவ்வொன்றும் இந்தியாவில் தனியாக குறை தீர்ப்பு அதிகாரி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் போன்ற புதிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியது. அதிகாரியின் பெயர், தொடர்பு முகவரி போன்ற முக்கிய தகவல்களை மத்திய அரசிடம் தெரிவிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் புதிய விதிகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறி மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தது ட்விட்டர். எனினும் கொஞ்சம் கொஞ்சமாக அரசின் வழிக்கு வந்தது ட்விட்டர் நிறுவனம். சமீபத்தில் 80-க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் மற்றும் ட்விட்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பட்டியலை நிறுவனம் சமர்ப்பித்தது. என்றாலும் இன்னும் பல அரசு உத்தரவுகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக பதிவிடப்பட்ட சென்சிட்டிவான கன்டென்ட்டை அகற்றுதல் அல்லது முடக்குதல் தொடர்பாக ஜூன் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் IT சட்ட பிரிவு 69 A இன் கீழ் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு ட்விட்டர் இணங்க தவறி உள்ளது. இதனை அடுத்து கடைசி வாய்ப்பாக . ட்விட்டரின் தலைமை இணக்க அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
Also Read : இனி யாரும் தேவையில்லாத மெசேஜ் அனுப்ப முடியாது.. whatsapp-ன் புதிய அப்டேட்
இதனிடையே பலமுறை நோட்டீஸ் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், ட்விட்டர் தொடர்ந்து அலட்சியம் காட்டி விதிகளை மீறுகிறது. எனவே இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. Twitter Inc. அரசின் வழிகாட்டுதல்களையும் , புதிய IT சட்டத்தையும் தொடர்ந்து மீறினால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.