முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்..!

தமிழ்நாடு அரசு முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளை ’மருத்துவமனை தினம்’ என அறிவித்து அவரை கவுரவப்படுத்தியது.

முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்..!
முத்துலட்சுமி ரெட்டி
  • News18
  • Last Updated: July 30, 2019, 7:25 PM IST
  • Share this:
கூகுள் ஒவ்வொரு நாளும் முக்கிய தலைவர்கள், பிரபலங்களின் பிறந்தாளை சிறப்பித்து டூடுல் வைத்து பெருமைப்படுத்தும். அந்தவகையில், முதல் பெண் மருத்துவராக,  பெண்களுக்கான முன்னோடியாக வாழ்ந்து இறந்த முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக டூடுல் இன்று வைத்துள்ளது.

அதில் அவர் பெண்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர் என்பதால் கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு கையை நீட்டுகிறார். அவர் பாதையில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என சாதி, மத பேதமின்றி பயணிப்பதுபோல் அனிமேஷன் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இதை பெங்களூருவைச் சேர்ந்த அர்ச்சனா ஸ்ரீனிவாசன் என்பவர்தான் வரைந்துள்ளார்.

முத்துலட்சுமி மருத்துவம் மட்டுமன்றி கல்வி, சட்டம், அரசியல் ஆகியவற்றிலும் தடம் பதித்தவர். அதுமட்டுமன்றி தன்னுடைய கடைசி நிமிடம் வரையிலும் பெண்களுக்கான சம உரிமை, கல்வி, குழந்தைத் திருமணம் என பெண்களின் முன்னேற்றத்திற்காகவே கழித்தவர்.
1883 ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த இவருக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்ய வீட்டில் முடிவு செய்தனர். அவற்றை எதிர்த்து படிக்க வேண்டும் என புத்தகத்தை தூக்கிக் கொண்டு போராட்டம் நடத்திய பிறகுதான் கல்வி சாத்தியமானது. பின் தமிழ்நாட்டில் உள்ள மஹாராஜா கல்லூரியில் அதுவும் ஆண்கள் மட்டுமே படிக்கக் கூடிய கல்லூரியில் முதல் பெண்ணாக கால் தடத்தை பதித்தார். படிப்பில் வல்லவராக இருந்ததால் ஸ்காலர்ஷிப் மூலம் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் மாணவியானார். மருத்துவப் படிப்பை முடித்தபின் அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் கத்தியைப் பிடித்த முதல் பெண் மருத்துவரும் முத்துலட்சுமி ரெட்டிதான்.

அடுத்ததாக தன் தங்கை புற்று நோய் பாதிப்பால் இறந்ததால் 1954 ஆண்டு ’அடையார் புற்றுநோய் மையம்’ திறந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சையும் அளித்தார். தற்போது இந்த மையம் உலகம் முழுவதும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தன்னிகரில்லா தொண்டுக்காக இந்திய அரசாங்கத்தால் ’பத்ம பூஷன்’ விருதும் பெற்றார்.அதோடு தமிழ்நாடு அரசு முந்துலட்சுமியின் பிறந்தநாளை ’மருத்துமனை தினம்’ என அறிவித்து அவரை கவுரவப்படுத்தியது. அதுமட்டுமன்றி கர்ப்பிணிகளுக்கான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏழை கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட ஐந்து தவணைகளாக 18,000 ரூபாய் தர உத்தரவிட்டு நடைமுறையிலும் உள்ளது. தற்போது இந்த திட்டத்தால் தமிழகம் முழுவதும் பல கர்ப்பிணிகள் பலனடைந்து வருகின்றனர்.

இப்படி மருத்துவத் துறையில் சாதித்தது மட்டுமன்றி அரசியலிலும் களம் இறங்கி பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின் பெண்களின் கல்விக்கு உத்திரவாதம் , சம உரிமை, குழந்தை திருமணம் என பெண்களுக்கு எதிரான விஷயங்களுக்காக போராடி பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார்.
First published: July 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்