பிறருக்கு பணம் அனுப்பவும், பிறரிடம் இருந்து பணம் பெறவும் நம்மில் பலர் யூபிஐ பேமெண்ட் வசதிகளைப் பயன்படுத்தி வருகிறோம். ஏனெனில், பயன்பாட்டிற்கு அது மிகவும் எளிமையாகவும், சௌகரியமானதாகவும் இருக்கிறது. ஒருவருக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு சரியான சில்லறை நம் கையில் இல்லையே என்ற கவலை யூபிஐ பேமெண்ட் முறை காரணமாக மறைந்து விட்டது.
மெசேஜ் அனுப்புவதற்கு பிரபலமானதாக அறியப்படும் வாட்ஸ் அப்-பிலும் கூட யூபிஐ பேமெண்ட் வசதி இருக்கிறது. நமது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கு இந்த வசதி உபயோகமாக இருக்கிறது.
பொதுவாக யூபிஐ பரிவர்த்தனை என்பது மிக எளிமையானது. வெறுமனே ஒரு க்யூ.ஆர். கோடு ஒன்றை ஸ்கேன் செய்து, செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட்டு, நீங்கள் அனுப்பி விடலாம். அதே சமயம், வாட்ஸ் அப்-பில் நிதி சார்ந்த மோசடிகள் ஏராளமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளன.
மோசடி நபரிடம் இருந்து அழைப்பு
டெல்லியைச் சேர்ந்த வாட்ஸ் அப் பயனாளருக்கு அண்மையில் 8420509782 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. இன்டர்நெட் இணைப்பு பிரச்சினைகள் தொடர்பாக நீங்கள் புகார் செய்துள்ளீர்களா என்று அந்த அழைப்பில் பேசியவர் வினவினார். இதற்கு அந்த பயனாளர் பதில் அளிக்கையில், “நாங்கள் ஏர்டெல் சேவையை குடும்பத் திட்டத்தின் கீழ் பயன்படுத்தி வருவதால், அதை எங்கள் தந்தை தான் கவனித்துக் கொள்கிறார். எங்கள் அப்பா இப்போது வீட்டில் இல்லை. நீங்கள் பிறகு அழையுங்கள்’’ என்றார்.
மோசடி எண்ணில் டயல் செய்ய அறிவுறுத்தல்
தந்தை வீட்டில் இல்லை என்ற பதிலை பயனாளர் கூறியதும், மறுமுனையில் பேசிய நபர் (மோசடியாளர்) அதை அத்துடன் விட்டுவிடவில்லை. உங்கள் ஃபோனில் இருந்து *401*8404975600 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நம்பருக்கு டயல் செய்தால் ஏர்டெல் சேவை மைய பணியாளர்கள் உங்களை 1 அல்லது 2 நாட்களுக்குள் தொடர்பு கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். இது மோசடி வலை என்பது தெரியாமல் அந்தப் பயனாளர் இதை டயல் செய்து விட்டார்.
Also Read : வாட்ஸ் அப் அக்கவுண்ட்கள் திருட கூடும் - ஜாக்கிரதை!
வாட்ஸ் அப் லாக் அவுட்
மோசடி நபர் குறிப்பிட்ட எண்ணுக்கு அவர் டயல் செய்ததுமே அடுத்த 10 நிமிடங்களில் அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது. உங்கள் மொபைல் எண் வைத்து புதிய டிவைஸில் வாட்ஸ் அப் பயன்படுத்த வேண்டும் என்றால் பின் நம்பர் குறிப்பிடுங்கள் என்று அந்த செய்தில் கூறப்பட்டிருந்தது. பயனாளர் அதன்படி செய்து முடித்ததுமே ஃபோன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் வாட்ஸ் அப்-பில் இருந்து லாக் அவுட் ஆகிவிட்டார்.
Also Read : ஆபத்து!! உடனே கூகுள் குரோம் அப்டேட் பண்ணுங்க... மத்திய அரசு எச்சரிக்கை!
மோசடி அரங்கேற்றம்
பாதிக்கப்பட்ட பயனாளர் இதுகுறித்து கூறுகையில், “வாட்ஸ் அப் லாக் அவுட் ஆனதும் எனக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டது. 401 என்பது நமது மொபைலுக்கு வரும் கால்களை ஃபார்வார்டு செய்வதற்கானது போல. அந்த நம்பரை நான் டயல் செய்ததும், அனைத்து இன்கம்மிங் அழைப்புகளும் மோசடியாளரின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது’’ என்று கூறினார்.
இதற்கிடையே, மோசடி செய்த நபர், பயனாளரின் வாட்ஸ் அப் மூலமாக அவரது நண்பர்கள் 50க்கும் மேற்பட்டோரிடம் பண உதவி கேட்டு மெசேஜ் அனுப்பி விட்டர். சிலர் தெரியாமல் பணத்தையும் பரிவர்த்தனை செய்து விட்டனர். இது தெரிய வந்த பயனாளர் இப்போது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
Also Read : வாட்ஸ்அப் யூஸர்களே உஷார்... இப்படியும் ஹேக்கர்கள் உங்கள் பணத்தை திருடலாம்!
பாதுகாப்பை உறுதி செய்ய
- வாட்ஸ் அப்-பில் இரண்டு அடுக்கு ஆதண்டிகேஷன் முறையை நாம் பயன்படுத்த வேண்டும்.
- 401 மற்றும் அதனுடன் இணைந்த 10 இலக்க எண்களை டயல் செய்யக் கூடாது.
- முன்பின் தெரியாத ஃபோன் அழைப்புகள் மூலமாக வரும் லிங்க்குகளை கிளிக் செய்யக் கூடாது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.