அயர்ன் மேன் திரைப்படத்தில், டோனி ஸ்டார்க் விமானம் இல்லாமல் ஒரு சூட் அணிந்து கொண்டு பறப்பதை பார்த்திருப்போம். தனி மனிதனே ராக்கேட் போல மாறி எப்படி பறக்க முடியும் இது எல்லாம் கதைகளில் தான் நடக்கும் நிலத்தில் எப்படி மனிதன் பறக்க முடியும் என்று யோசிப்போம். ஆனால் இது சத்தியம் ஆகியுள்ளது.
மனிதனை பறக்கவைக்கும் உடைக்கு 'ஜெட் பேக் சூட்' என்று பெயர். திரைப்படங்களில் பார்த்துவந்த இந்த உடை இப்போது நிதர்சனத்திற்கு வந்துள்ளது. கேஸ் டர்பைன் என்ஜின்களோடு செயல்படும் இந்த சூட்டை அணிந்த நபர் நிலத்தில் இருந்து சாதாரணமாக 10-12 அடி உயரம் வரை பறக்க முடியும். இதை ராணுவ பயன்பாட்டிற்கு சோதனை செய்து வருகின்றனர்.
இங்கிலாந்தின் ராயல் நேவி மற்றும் அமெரிக்காவின் மரைன் கார்ப்ஸ் ஏற்கனவே இந்த ஜெட் பேக் சூட்களை தங்களது பல கடற்படை செயல்பாடுகளில் பயன்படுத்தி சோதனை செய்து வரும் நிலையில் இந்திய ராணுவமும் விரைவில் ஜெட் பேக் சூட்களை பயன்படுத்த உள்ளது.
இதற்காக ஜனவரியில், பாதுகாப்பு அமைச்சகம் (MoD) ஃபாஸ்ட் டிராக் நடைமுறை மூலம் அவசரகால கொள்முதல் செய்வதற்காக மொத்தம் 48 ஜெட் பேக் சூட்களுக்கான முன்மொழிவுக்கான கோரிக்கையை வெளியிட்டது. உலகம் முழுவதும் இது போன்ற ஜெட் பேக் சூட்டுகளை ஏற்றுமதி செய்து வரும் ரிச்சர்ட் பிரவுனிங்கால் தொடங்கப்பட்ட இங்கிலாந்தை தளமாகக் கொண்ட கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளது.
மனிதர்கள் அணிந்து கொள்ளும் இந்த உடை திரைப்படத்தில் இருப்பது போல நிஜத்தில் இருப்பதில்லை. அதை விட அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உடல் பகுதியில் காற்றை கீழே தள்ளும் சிறு சிறு அலகுகளை கொண்டிருக்கும். இதை இயக்கி ராக்கெட்டை போல காற்றை கீழே தள்ளி மனிதன் மேலே பறக்க வேண்டும். பறக்கும் போது திசை மாற்றுவதற்கும், சுழல்வதற்கும் தனி அமைப்புகள் உள்ளன.
எடை குறைவாகவும், உடல் அமைப்புக்கு ஏற்றதாகவும் இந்த ஆடைகள் விளங்குகிறது. இதனால் ராணுவ வீரர்கள் இதை அணியும்போது இது அவர்களது மேல் தோல் போலவே மாறிவிடும். எடை அதிகம் கொண்டு பாரமாக இருக்காது என்று நிறுவனம் விளக்குகிறது.
விமான பயணி ஆவதற்கு குறைந்தது ஒரு வருடம் பயிற்சி தேவை . ஆனால் இந்த ஜெட் பேக் சூட்டை பழகிக்கொள்ள ஒரு நாள் போதுமாம். அதன் வேகத்தையும் விசையையும் கட்டுப்படுத்த பழகினால் போதும் அதன் பின்னர் எளிதாக மனிதன் பறக்க பழகிக்கொள்வான் என்று நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர். கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் சொந்த பயிற்சி நிலையத்தையும் வைத்து பறப்பதற்கான பயிற்சியை வழங்குகிறது.
கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் இந்த ஜெட் சூட்களை ராணுவத்தினர் மற்றும் பறக்கும் சுகத்தை விரும்பும் நபர்களுடன் இணைந்து சோதனை செய்து வருகிறது. அதன்மூலம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளையும் செய்துகொண்டே இருக்கிறது. வரும் காலத்தில் போர் மற்றும் வணிக சூழல்களில் ட்ரோன்கள் போலவே இந்த ஜெட் சூடுகளும் பயன்படுத்தப் படலாம் என்று நம்புகின்றனர்.
ராணுவம் மட்டும் இல்லாது தனி நபரும் வாங்கக் கூடிய இந்த சூட்டின் விலை 3 கோடியே 30 லட்சமாம். தனிநபர்களுக்கு, தெற்கு கலிபோர்னியாவில் இரண்டு நாள் பயிற்சி வழங்கப் படுகிறது. பயிற்சித் திட்டத்திற்கு சுமார் 4.12 லட்சம் பீஸ் வசூலிக்கிறார்கள். விருப்பமான மக்கள் அதில் இணைந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Technology, US military