டெஸ்லா நிறுவனத் தலைவர் மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கால் டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளின் விலை சரசரவேன உயர்ந்தது. வழக்கமாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் பங்குச்சந்தை நிலைமை பற்றிய செய்தி புதுப்பிக்கப்படும். அதில் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய செய்தி கடந்த திங்கட்கிழமை முதல் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதனால், டிவிட்டர் பங்குகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளார். அதாவது, 73.5 மில்லியன் ஷேர்களை வாங்கியுள்ளார். அது மட்டுமின்றி, எலான் மஸ்க் பேசிவ் இன்வெஸ்ட்மென்ட் செய்வார் என்று கூறப்படுகிறது. அதாவது, மிகவும் மெதுவாக நன்றாக ஆய்வு செய்து தன்னுடைய முதலீடுகளை நீண்ட கால முதலீடாக இருக்குமாறு பார்த்துக்கொள்வார். மேலும், குறுகிய கால முதலீடு அல்லது வாங்கிய உடனே விற்பது போன்றவை இவரிடம் பார்க்க முடியாது. இதனால், டிவிட்டரின் பங்குகளை வாங்கியது நீண்ட கால முதலீடாகவே கருதப்படுகிறது.
திங்களன்று வெளியான பங்குகள் பற்றிய அறிக்கையில், டிவிட்டர் பங்குச்சந்தை மதிப்பு 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது தெரிய வந்தது.
எலான் மஸ்க் தடாலடியாக பல விஷயங்களை செய்பவர். ஏற்கனவே, இவருக்கும் டிவிட்டருக்கும் மறைமுகமான பனிப்போர் நடைபெற்று வருகிறது. திடீரென்று டிவிட்டரில் முதலீடு செய்ததற்கு என்ன காரணமாக இருக்கும் என்று விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எந்த விஷயமாக இருந்தாலும், எலான் மஸ்க் அதை வெளிப்படையாகக் கூறிவிடுவார். இவருடைய டிவிட்டர் கணக்கில் பரபரப்பான வாதங்களுக்கு பஞ்சமே இல்லை. அதே போல, சில நாட்களுக்கு முன், டிவிட்டரில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று ரகளையான டிவீட் செய்திருந்தார். டிவிட்டரில் நிறைய கட்டுப்பாடுகள் இருப்பதால், பேச்சுரிமை மறுக்கப்படுகிறது என்பது விவாதிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, சுதந்திரமாக இயங்க முடியாமல் இருப்பதால், புதிதாக ஒரு சமூகவளைதளம் உருவாக்கினால் என்ன என்று தீவிரமாக சிந்திப்பதாகவும் மஸ்க் கூறினார்.
Also Read : வாழ்க்கையில் வெற்றியடைய எலான் மஸ்க் கூறும் 6 ரகசியங்கள்..!
மஸ்க்கிற்கும் டிவிட்டர் அதிகாரிகளுக்கும் ஏற்கனவே சில முறை விவாதங்கள் நடந்தன. தற்போதைய சமூகவளைத்தளங்களில், டிவிட்டரில் மட்டும் பதிவு செய்தால் அதை திருத்த முடியாது. எனவே, எடிட் அம்சத்தை கொண்டு வர வேண்டும் என்று பலரும் ஆண்டுகளாக கோரிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், எலான் மஸ்க் தனது ஒரு டிவீட்டில், எடிட் பட்டன் வேண்டுமா வேண்டாமா என்ற ஒரு poll நடத்தினார்.
அதைப் பார்த்த, தற்போதைய டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால், உங்களுடைய வாக்குகள் தீவிரமான விளைவை ஏற்படுத்தும். எனவே, கவனமாக உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள் என்று ரீடிவீட் செய்திருந்தார்.
டிவிட்டரில் மிகப்பெரிய அளவுக்கு பங்கை வைத்திருக்கும் தனிநபர் எலான் மஸ்க். அதே போல, இவருக்கு 80 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். எனவே, டிவிட்டரில் ஏற்படக்கூடிய மாற்றங்களில் மஸ்க்கின் பங்கு கணிசமாக இருக்கும்.
Also Read : ஸ்மார்ட் போன் தண்ணீருக்குள் தவறி விழுந்தால்... முதலில் இதை செய்யுங்கள்!
டிவிட்டருடன் மோதல் என்பது போல தோன்றினாலும், மற்றொரு பக்கம், மஸ்க்கின் இந்த செயல்களால் அவருடைய டெஸ்லா நிறுவன பங்குகளின் மதிப்பும் கொஞ்சம் அதிகரித்துள்ளது. எதிர்பார்த்ததை விட முதல் மூன்று மாதங்களில் டெஸ்லா நிறுவனக் கார்களின் விற்பனை குறைவாகவே இருந்தது. இந்த அறிக்கை வெளியான இரண்டே நாட்களில் டிவிட்டரில் முதலீடு செய்துள்ளார். எனவே, கார்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு தான் இப்படி தடாலடியான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.