பெரும்பாலான மக்களுக்கு முதல் போன் எது என்று கேட்டால் அது நோக்கியா நிறுவனத்தின் போனாகவே இருக்கும். ஐபோன், ஒன் பிளஸ், விவோ, என்று எத்தனை போன் நிறுவனங்கள் வந்தாலும் நோக்கியா போனுக்கு இருக்கும் நாஸ்டாலஜிக் பீல் மாறவே மாறாது.ஆனால் நோக்கியா நிறுவனம் போன் தயாரிக்க தொடங்கப்பட்ட நிறுவனம் இல்லை என்று சொன்னால் நம்புவீர்களா?
ஆமாம் மக்களே. நோக்கியா நிறுவனம் முதலில் தயாரித்து விற்பனை செய்தது டாய்லட் பேப்பர்களை தான். டாய்லட் பேப்பரில் இருந்து தொழில்நுட்ப சாதனத்திற்கு எப்படி மாறியது என்ற சுவாரசிய கதையை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா. கதைக்குள் போவோம்..
1865 இல் தெற்கு பின்லாந்தில் ஒரு சிறு கூழ் நிறுவனம் நிறுவப்பட்டது. அந்த நேரத்தில், ஃபின்னிஷ் பொறியாளர், ஃப்ரெட்ரிக் ஐடெஸ்டாம் தனது முதல் காகித ஆலையை தம்பேரில் கட்டினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, செழிப்பாக வளர்ந்த சிறு வணிகம் நோக்கியாவுக்கு மாறியது. நோக்கியாவிர்தா ஆற்றின் கரையில் அமைந்த நிறுவனத்திற்கு நோக்கியா என்று வணிகரீதியான பெயர் வைத்தனர். அந்த நேரத்தில் கழிப்பறை காகித உற்பத்தியில் முன்னாடி நிறுவனமாக திகழ்ந்து வந்தனர்.
அதன் பின்னர் அருகில் உள்ள நதியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து தங்கள் நிறுவனத்தில் பயன்படுத்தி வந்தனர். பின்னர், 1918 இல், நோக்கியாவும் ஃபின்னிஷ் ரப்பர் நிறுவனமும் இணைந்து, டயர்கள் மற்றும் பூட்ஸ் உற்பத்தியைத் தொடங்கியது. நோக்கியா நிறுவனத்தின் மூன்றாம் பொருளாக சேர்ந்தது. வியாபாரமும் சூடுபிடிக்கத் தொடங்கியது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், ஃபின்னிஷ் நிறுவனம் வளர்ந்தது. உண்மையில், சுயமேன் காபெலிடேஹதஸ் ஓய் (Suomen Kaapelitehdas Oy) என்ற கேபிள் நிறுவனத்தை நோக்கியா கையகப்படுத்தியது. இந்த கேபிள்கள் மூலம் நோக்கியா உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மற்ற இடங்களுக்கு அனுப்பி அதில் ஒரு லாபத்தை பார்க்க முடிவு செய்தது.
அதன் பின்னர் மெதுவாக தொலைக்காட்சிகள், மைக்ரோ-கம்ப்யூட்டர்கள் போன்றவற்றைத் தயாரிக்கத் தொடங்கியது. இறுதியாக 1980களின் பிற்பகுதியில், நோக்கியா தொலைத்தொடர்புக்கு திரும்பியது. 1990 களில் தான் தொலைத்தொடர்பு தொடர்பான எல்லாவற்றிலும் பிரத்யேகமாக கவனம் செலுத்தத் தொடங்கியது.
2000 களில் நிறுவனம் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறியது. அதன் சொந்த நாடான பின்லாந்தில் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அந்த நேரத்தில், நோக்கியாவின் நிகர விற்பனையின் மதிப்பு, ஃபின்லாந்து அரசாங்கத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு இணையானதாக இருந்தது. அதோடு ஹெல்சின்கி பங்குச் சந்தையின் மதிப்பில் 60% நோக்கியா நிறுவனத்தினுடையதாக இருந்தது.
கார்களில் போன்கள் பயன்படுத்தும் முறையை நோக்கியா நிறுவனம் தான் முதலில் தொடங்கியது. அதன் பின்னர் செல்லுலார் தொலைபேசிகளை தயாரிக்கத் தொடங்கியது. அதன் பின்னர் ஸ்மார்ட் போன்கள் வந்தாலும் குறைந்த பட்ஜெட் போன்களை தயாரிப்பதில் தான் நிறுவனம் கவனம் செலுத்தியது. சாதாரண மக்களை எளிதில் சென்று சேர்ந்தது.
இதையும் படிங்க: நெட்ஃபிலிக்ஸ் கதை தெரியுமா?
முதல் ஐபோன் வரும் வரை நோக்கியா தான் தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னனாக இருந்தது. அதன் பின்னர் நோக்கியாவின் டெலிபோனி பிரிவை மைக்ரோசொப்ட் நிறுவனத்திடம் விற்றது. இன்று, நோக்கியா முக்கியமாக தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துகிறது, மேலும் 66 தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடன் 5G ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நிலவில் செல்லுலார் வலையமைப்பை உருவாக்க நாசாவுடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இப்படி தாங்க ஒரு பேப்பர் கூழ் நிறுவனம், உலகளாவிய தொலைத்தொடர்பு சாதனம் தயாரிக்கும் நிறுவனமாக மாறி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nokia, Smart Phone