ஆன்லைனில் லீக்கான 533 மில்லியன் பேஸ்புக் யூசர்களின் சுயவிவரங்கள்...!

ஆன்லைனில் லீக்கான 533 மில்லியன் பேஸ்புக் யூசர்களின் சுயவிவரங்கள்...!

ஃபேஸ்புக்

பேஸ்புக் தரவு மீறல் குறித்து பாதுகாப்பு நிபுணர் அலோன் கால் என்பவர் தான் முதன் முதலாக ட்விட்டரில் வெளியிட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சுமார் 533 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் யூசர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஆன்லைனில் கசிந்ததாக வந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த விவரங்களில் தொலைபேசி எண், பேஸ்புக் ஐடி, பிறந்த தேதி உள்ளிட்ட எண்ணற்ற தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிசினஸ் இன்சைடர் அறிக்கையின்படி, அமெரிக்காவில் 3.2 கோடி யூசர்கள், இங்கிலாந்தில் 1.1 கோடி மற்றும் இந்தியாவில் 60 லட்சம் யூசர்களின் தனிப்பட்ட தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாதிக்கப்பட்ட யூசர்களில் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிற இணை நிறுவனர்களான கிறிஸ் ஹியூஸ் மற்றும் டஸ்டின் மொஸ்கோவிட்ஸ் ஆகியோரும் அடங்குவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் தரவு மீறல் குறித்து பாதுகாப்பு நிபுணர் அலோன் கால் என்பவர் தான் முதன் முதலாக ட்விட்டரில் வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, "சுமார் 533,000,000 பேஸ்புக் கணக்குகளின் சுயவிவரங்கள் இலவசமாக இணையத்தில் கசிந்தன. இதன் பொருள் உங்களிடம் பேஸ்புக் கணக்கு இருந்தால், அந்த கணக்கிற்குப் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண் கசிந்திருக்கலாம். உங்கள் தரவின் மீது காட்டப்படும் அலட்சியம் குறித்த குற்றசாட்டை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொள்வதாக தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

தரவு கசிவில் யூசர்களின் தொலைபேசி எண், பேஸ்புக் ஐடி, அவர்களின் முழுப்பெயர், இருப்பிடம், கடைசியாக சென்ற இடம், பிறந்த நாள், மின்னஞ்சல் முகவரி, கணக்கு உருவாக்கிய தேதி, உறவு நிலை, யூசர்களின் பிற விவரங்கள் ஆகியவை அம்பலப்படுத்தப்பட்டதாக சைபர் கிரைம் புலனாய்வு நிறுவனமான ஹட்சன் ராக் நிறுவனத்தின் சி.டி.ஓ. தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைனில் கசிந்த யூசர்களின் தகவல்களை சைபர் குற்றவாளிகள் சமூக பொறியியல், மோசடி, ஹேக்கிங் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் பயன்படுத்துவார்கள் என்றும் அவர் பயனர்களை எச்சரித்தார்.

இருப்பினும், தரவு மீறலில் உங்கள் தொலைபேசி எண் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்கும் வழிகளும் சில உள்ளன. உங்கள் கணக்கு விவரங்கள் ஆன்லைனில் கசிந்ததா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்கக்கூடிய இரண்டு தளங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான், Have I Been Pwned அல்லது https://haveibeenpwned.com/ என்ற இணையத்தளம். இந்த லிங்கில் உள்நுழைந்து பேஸ்புக்கில் நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியைத் டைப் செய்ய வேண்டும். அதன்மூலம் பேஸ்புக் தரவு மீறல்களில் உங்கள் சுயவிவரங்கள் கசிந்துள்ளதா என்பதை இந்த வலைத்தளம் காண்பிக்கும்.

Also read... ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த LinkedIn - ஒருவாரம் விடுமுறை!

அதுமட்டுமல்லாமல், வேறு ஏதேனும் மீறல்களின் ஒரு பகுதியாக உங்கள் தரவுகள் கசிந்துள்ளதா இல்லையா என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்கும். இப்போதுவரை, உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி மட்டுமே நீங்கள் இந்த வலைத்தளத்தில் உங்கள் சுயவிவரங்கள் கசிவு குறித்து பார்க்க முடியும், விரைவில் தொலைபேசி எண் கொண்டு சர்ச் செய்ய Have I Been Pwned டிராய் ஹன்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மற்றொரு வலைத்தளமான The News Each Day-வில் உங்கள் தொலைபேசி எண் கசிந்துள்ளதா என்பதை சரிபார்க்க முடியும்.

இதற்கு newseachday.com என்ற லிங்கில் உள்நுழைந்து சர்ச் பாக்சில் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து சரிபார்த்துக் கொள்ளலாம் என்று ஹட்சன் ராக் நிறுவனத்தின் சி.டி.ஓ., கல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சுயவிவரங்கள் கசிந்தது குறித்து மறுத்து தெரிவிக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "இவை அனைத்தும் பழைய தரவுகள். கடந்த, 2019ல் ஏற்பட்ட பிரச்னை இது. அதை, அந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே கண்டுபிடித்து சரி செய்துவிட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: