Toolkit Controversy: காங்கிரஸ் டூல் கிட் விவகாரம்: டெல்லியில் ட்விட்டர் நிறுவன அலுவலகங்களில் திடீர் சோதனை!

ட்விட்டர்

"manipulated media" என டேக் செய்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

  • Share this:
பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி ‘டூல் கிட்’ (கருவித் தொகுப்பு) ஒன்றை உருவாக்கியிருப்பதாக சமூக வலைத்தளங்களிலும், பாஜக பிரமுகர்களாலும் ஆவணங்கள் சில வெளியான நிலையில், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் டெல்லி காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதுடன், உயிரிழப்புகளையும் அதிகப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையை கையாள்வதில் மத்திய அரசு தோல்வியை தழுவியிருப்பதாக எதிர்கட்சியான காங்கிரஸும் அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் விமர்சித்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் இந்தியாவையும், பிரதமர் மோடியையும் அவமதிக்கும் வகையில் டூல் கிட் ஒன்றை காங்கிரஸ் கட்சி உருவாக்கியிருப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா உட்பட சில பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் இது குறித்து சில ஆவணங்களையும் அவர்கள் இணைத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இந்த விவகாரம் பெரிய புயலைக் கிளப்பிய நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்தது. மேலும் தவறான தகவல்களை பரப்பும் ஜே.பி.நட்டா, ஸ்மிருதி இராணி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளை நிரந்தரமாக முடக்கி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது.

இதனையடுத்து கடந்த மே 21ம் தேதி சம்பிட் பித்ரா உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் வெளியிட்ட குறிப்பிட்ட பதிவுகளுக்கு மட்டும் "manipulated media" என்ற முத்திரையுடன் ட்விட்டர் வகைப்படுத்தியது.

விசாரணைக்குள் இருக்கும் விவகாரத்தில் முன்கூட்டியே தீர்ப்பு கூறும் வகையில் ட்விட்டர் செயல்பட முடியாது எனவும் பாஜக தலைவர்களின் கணக்குகளை "manipulated media"என முத்திரை குத்த கூடாது அந்த குறிப்பிட்ட டேக்-ஐ நீக்க வேண்டும் என ட்விட்டருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் "manipulated media" என டேக் செய்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

இதனைத்தொடர்ந்து டெல்லி மற்றும் குருகிராமில் இருக்கும் ட்விட்டர் இந்தியாவின் அலுவலகங்களில் டெல்லி காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

டெல்லியின் லாரோ சாராய் பகுதியில் இருக்கும் அலுவலகம் மற்றும் குருகிராமில் உள்ள ட்விட்டரின் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
Published by:Arun
First published: