சந்திரயான் 2: இந்தியர்கள் ஏன் பெருமைகொள்ள வேண்டும்... சில முக்கியமான தகவல்கள்!

சந்திரயான் 2

அமெரிக்கா, சீனா, ரஷ்யா-வுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறங்க உள்ளது சந்திரயான் 2.

  • Last Updated :
  • Share this:
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள உலகின் முதல் விண்கலம் சந்திரயான் 2.

இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் மிக முக்கியமான மைல்கல் சந்திரயான் 2. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள உலகின் முதல் விண்கலம் சந்திரயான் 2.

சந்திரயான் 1 அடுத்தகட்ட மிஷன் சந்திரயான் 2. இதை ஜிஎஸ்எல்வி எம்கே-III எம்1 என்ற ஏவு வாகனம் சுமந்து செல்கிறது. இந்த மிஷன் 18 செப்டம்பர் 2008-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு துவங்கப்பட்டது. ஜூலை 15, 2019-ல் விண்ணில் ஏவப்படவுள்ளது. 2019 செப்டம்பர் மாதம் 6-ம் தேதி நிலவில் தரையிறங்கவுள்ளது.

தலைமையகத்துக்கு தகவல்களை பரிமாறும் சுற்று வட்டப்பாதையில் நிலைத்துநிற்கும் கருவி (Orbiter), விக்ரம் என்ற நிலவில் தரையிறங்க பயன்படும் கருவு (Lander), பிரக்யான் என்ற நிலவின் மேல்பகுதியில் வலம்வந்து ஆய்வு செய்து, மாதிரிகளை சேகரிக்கும் கருவி (Rover) போன்றவை சந்திரயான் 2-ல் இடம்பெற்றுள்ளன. பிரக்யான், தரையிறங்கிய இடத்தில் இருந்து 500 மீட்டர் பயணித்து ஆய்வுகள் செய்யக்கூடியது.

சந்திரயான் 2 ஏன் முக்கியமான ஒன்று: நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கவுள்ள செயற்கைக்கோள். இந்திய தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டு, நிலவின் மேல்பகுதியை ஆய்வு செய்யும் முதல் செயற்கைக்கோள். நிலவில் மெதுவாக தரையிறங்கும் செயற்கைக்கோளை உருவாக்கிய நான்காவது நாடு இந்தியா.

நிலவில் செயற்கைக்கோள்களை மெதுவாக தரையிறக்க இதுவரை 38 முறை உலகின் பல்வேறு நாடுகள் முயற்சித்துள்ளன. இந்த முயற்சியில் வெற்றியடைய சுமார் 52 சதவிகிதம் தான் வாய்ப்பிருக்கிறது.

சந்திரயான் 1-க்கும் சந்திரயான் 2-க்கும் இடையேயான மிக முக்கியமான வேறுபாடுகள்:

சந்திரயான் 1:

நிலவை ஆய்வு செய்ய இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் செயற்கைக்கோள். இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் சிறந்த செயற்கைக்கோள். நிலவை ஒரு சுற்றுவட்டப் பாதையில் சுற்றி ஆய்வு செய்தது. இதற்கு ஆன மொத்த செலவு 380 கோடி ரூபாய். பிஎஸ்எல்வி-சிII (PSLV-CII) ஏவு வாகனம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. மொத்தம் 312 நாட்கள் இந்த செயற்கைக்கோள் செயல்பாட்டில் இருந்தது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்வீடன், பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 11 பேர் சந்திரயான் 1 செயற்கைக்கோளுக்காக பணியாற்றினார்கள். செயற்கைக்கோளில் கருவிகளைப் பயன்படுத்தி அறிவியல் ஆய்வு செய்வது, அறிவியல் அறிவை அதிகப்படுத்திக்கொள்வது போன்றவையே சந்திரயான் 1-ன் முக்கிய நோக்கங்களாக இருந்தன.

சந்திரயான் 2:

சந்திரயான் 1 செயற்கைக்கோளின் செய்த ஆய்வுகளை மேலும் விரிவாக ஆய்வு செய்வதே சந்திரயான் 2-ன் முக்கியக் குறிக்கோள். நிலவின் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கும் முதல் இஸ்ரோ செயற்கைக்கோள் இதுவே. செயற்கைக்கோளை வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் கருவி (Orbiter), விக்ரம் என்ற நிலவில் தரையிறங்க பயன்படும் கருவு (Lander), பிரக்யான் என்ற நிலவின் மேல்பகுதியில் வலம்வந்து ஆய்வு செய்து, மாதிரிகளை சேகரிக்கும் கருவி (Rover) போன்றவை சந்திரயான் 2-ல் இடம்பெற்றுள்ளன. இந்த செயற்கைக்கோளை செய்வதற்கு 960 கோடி ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 365 நாட்கள். இந்த மிஷனில் மொத்தம் 14 பேர் பணியாற்றினார்கள். இதில் ஒருவர் நாசாவைச் சேர்ந்தவர், மற்ற 13 பேரும் இந்தியர்கள். நிலவின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கவுள்ளது சந்திரயான் 2. புதிய தொழில்நுட்பங்களை சோதனை செய்யவும், நிலவின் மேற்பரப்பிலேயே ஆய்வுகள் செய்யவும் இருக்கிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா-வுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறங்க உள்ளது சந்திரயான் 2.

நிலவின் மேற்பரப்பில் இருக்கும் தாதுக்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யவுள்ளது. அதோடல்லாமல், அங்கு தண்ணீர் இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்யவுள்ளது.

Published by:Ilavarasan M
First published: