உளவு பார்க்கப்படும் வாட்ஸ்அப் தகவல்கள் - விளக்கம் அளிக்க மத்திய அரசு உத்தரவு

உளவு பார்க்கப்படும் வாட்ஸ்அப் தகவல்கள் - விளக்கம் அளிக்க மத்திய அரசு உத்தரவு
whats app
  • News18
  • Last Updated: November 1, 2019, 7:47 AM IST
  • Share this:
வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களை உளவு பார்த்த விவகாரத்தில் அந்நிறுவனம் விளக்கம் அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ்அப் தகவல்களை உளவு பார்க்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உளவு பார்க்கப்பட்டதை வாட்ஸ்அப் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. என்ற நிறுவனத்தின் பெகாசுஸ் என்ற மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த வீடியோ கால் தொடர்பு மூலம் பெகாசுஸ் உளவு மென்பொருளை ஒரு செல்போனில் எளிதாக இறக்கிவிட முடியும். அந்த வீடியோ காலை ஒருவர் ஏற்கவில்லை என்றபோதும் அந்த உளவு மென்பொருள் செல்போனில் பதிவாகிவிடும். இந்த மென்பொருள் மூலம் ஒரு செல்போனில் உள்ள வாட்ஸ்அப் தகவல், அதில் பேசுவதின் குரல் பதிவு, பயன்படுத்தும் பாஸ்வேர்ட், கேமரா பதிவு என அனைத்தையும் பெற்றுவிட முடியும். ஸ்கைப், பேஸ்புக் மெசேஞ்சர், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களுக்குள் புகுந்து உளவு பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த பெகாசுஸ் மென்பொருள்.


இதனை பயன்படுத்தி உலகம் முழுவதும் 1,400 பேரின் வாட்ஸ்அப் தகவல்களை பல நிறுவனங்கள் உளவு பார்த்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் 20 பேரின் வாட்ஸ்அப் தகவல்கள் இப்படி உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் உண்மையான எண்ணிக்கை அதை விட அதிகமாக இருக்கும் என தெரிகிறது.

உளவு பார்க்க காரணமான சாப்ட்வேரை தயாரித்த நிறுவனம் என்ற வகையில் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. இந்திய மதிப்பில் 53 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. மேலும் உளவு பார்த்த தகவல் தெரியவந்ததும் வாட்ஸ்அப்பின் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

ஆனால் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள என்.எஸ்.ஓ. நிறுவனம், தங்களது உளவு மென்பொருள் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.இந்நிலையில் இந்தியர்களை உளவு பார்த்த புகாரில் 4-ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்தை வைத்துள்ள பேஸ்புக்கிற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே,  உளவு பார்க்கப்பட்டதில் மத்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.


மத்திய அரசின் சில அமைப்புகள் உளவு பார்க்கும் மென்பொருளை உருவாக்கி அதை உலவ விட்டு தகவல்களை உளவு பார்த்து வருவதாகவும் சுர்ஜேவாலா தெரிவித்தார். தனி நபர் தகவல் பாதுகாப்பு ஒவ்வொருவரின் உரிமையாக உள்ள நிலையில் அதை மீறும் வகையில் பாஜக அரசின் செயல்பாடுகள் இருப்பதாகவும் அவர் மத்திய அரசை விமர்சித்தார்.


Also See....


First published: November 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading