பேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அட்டகாசமான டிஜிட்டல் சேவைகளை அவ்வப்போது அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. இதற்கு முன்பு பேடிஎம் தளத்தில் சிலிண்டர் புக் செய்வதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டதுடன், அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் அதை இலவசமாக பெற்றுக் கொள்வதற்கான கூப்பன் கோடு மற்றும் டிஸ்கவுண்ட் ஆகியவை வழங்கப்பட்டிருந்தன.
தற்போது, ரயில் பயணம் செய்யும் பேடிஎம் வாடிக்கையாளர்களின் சௌகரியம் கருதி புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ‘பை நவ் பே லேட்டர்’ (Buy Now Pay Later) என்ற சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது பேடிஎம் நிறுவனம். இந்த சேவையின் கீழ் வாடிக்கையாளர்களின் கைவசம் பணம் இல்லாவிட்டாலும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்குப் பிறகு வேறொரு சமயத்தில் இந்தக் கட்டணத்தை திருப்பி செலுத்தினால் போதுமானது.
வாடிக்கையாளர்கள் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதை மனதில் வைத்து, இதேபோன்று பல சேவைகளுக்கு ஏற்கனவே இந்த பை நவ் பே லேட்டர் வசதியை பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. குறிப்பாக, டிக்கெட் முன்பதிவு, யுடிலிட்டி பில்ஸ் மற்றும் ஷாப்பிங் செய்வதற்கும் கூட இந்த சலுகை வழங்கப்படுகிறது.
சில்லறை விற்பனை கடைகள் முதல் ஆன்லைன் தளங்கள் வரையில் எண்ணற்ற இடங்களில் பொருட்களை வாங்கவும், சேவைகளை பெறவும் இந்த சலுகையை யூசர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து பேடிஎம் பேமெண்ட்ஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பிரவீண் சர்மா கூறுகையில், “பேடிஎம் போஸ்பெய்டு திட்டத்தை இனி ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம். பணத்தை பின்னர் செலுத்தும் வசதியுடன், தடையற்ற மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பேமெண்ட் மூலமாக உடனடி டிக்கெட் முன்பதிவு பெற வாடிக்கையாளர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Also read... கூகுள் டிரைவில் வாட்ஸ்அப் சாட் மெசேஜ்களை பேக்அப் செய்வது எப்படி?
பேடிஎம் போஸ்ட்பெய்டு சேவை என்றால் என்ன?
பேடிஎம் போஸ்ட்பெய்டு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் கால அளவில் ரூ.60,000 வரை வட்டியில்லா கடன் பெற முடியும். அனைத்து ஆர்டர்களையும் ஒரேயொரு மாத பில் மூலமாக கணக்கீடு செய்து, மாத இறுதியில் பணம் செலுத்திக் கொள்ளலாம். ஒரே தவணையில் பணம் செலுத்த முடியவில்லை என்றால் ஈஎம்ஐ முறையில் பணம் செலுத்திக் கொள்ளலாம்.
ஐஆர்சிடிசி முன்பதிவு :
ஐஆர்சிடிசி தளம் அல்லது உங்கள் ஃபோனில் பேடிஎம் ஆப் செல்லவும்.
பயண விவரங்களை குறிப்பிட்டு, டிக்கெட் முன்பதிவு பக்கத்திற்கு செல்லவும்.
இப்போது பேமெண்ட் செக்சனில் ‘பே லேட்டர்’ என்ற வசதியை தேர்வு செய்யவும். பேடிஎம் போஸ்ட்பெய்டு வசதியை கிளிக் செய்து, லாகின் செய்யவும். இப்போது ஓடிபி கொடுத்து விட்டால், டிக்கெட் முன்பதிவு ஆகிவிடும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.