பாதிவிலைக்கு Apple iPad-ஐ வாங்க நினைத்து 19.2 லட்ச ரூபாயைப் பறிகொடுத்த பெங்களூரு டாக்டர்..

ஆன்லைன் மூலம் பாதிவிலைக்கு ஆப்பிள் iPad-ஐ வாங்க நினைத்த பெங்களுரூ டாக்டர் ஒருவரிடம்,19.2 லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளனர். 

ஆன்லைன் மூலம் பாதிவிலைக்கு ஆப்பிள் iPad-ஐ வாங்க நினைத்த பெங்களுரூ டாக்டர் ஒருவரிடம்,19.2 லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளனர். 

  • Share this:
டிஜிட்டல் புரட்சி காரணமாக பணப் பரிவர்த்தனைகள், ஷாப்பிங் உள்ளிட்டவை எல்லாம் ஆன்லைன் வசமாகிவிட்டன. ஒருபுறம் இது மிகப்பெரிய நன்மையாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் இணைய வழியில் கைவரிசை காட்டும் கும்பல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பிக்பாக்கெட் காலம்போய் தற்போது ஆன்லைன் வழியாக பணத்தை சுருட்டுவது எதார்த்தமாகிவிட்டது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரும் பாரபட்சமின்றி இணைய கொள்ளை கும்பலிடம் சிக்கிக்கொள்கின்றன.

பெங்களுரூவைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் ஆன்லைன் வழியாக பாதி விலையில் ஆப்பிள் ஐபேட் வாங்க விரும்பியுள்ளார். இதற்காக, ஆன்லைன் வலைதளமான Quikr -ல் பதிவு செய்து, தனது விருப்பத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட இணையக் கொள்ளையர்கள் இந்தியாவில் 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் iPad-ஐ துபாயில் இருந்து 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய டாக்டர், உடனடியாக 45 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த கும்பல் கூறிய அக்கவுண்டுக்கு அனுப்பியுள்ளார். 

ஆனால், அவருக்கு iPad கிடைக்கவில்லை. மீண்டும் டாக்டரை தொடர்பு கொண்ட அந்தக் கும்பல் சேல்ஸ் உள்ளிட்ட வரிகள் செலுத்த வேண்டியிருப்பதால் கூடுதலாக பணம் அனுப்புமாறு கூறியுள்ளனர். மேலும், இதே விலையில் 5 ஆப்பிள் Ipad-களையும், 2 லேப்டாப் மற்றும் 5 வாட்சுகளை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதில் மயங்கிய டாக்டர், இணைய கும்பலுக்கு 19.2 லட்சம் ரூபாய் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பியுள்ளார். 

2 மாதத்துக்குள் ஆர்டர் செய்த பொருட்களையெல்லாம் கொடுப்பதாக இணைய கும்பல் உறுதியளித்திருந்த நிலையில், காலக்கெடு முடிந்தபிறகும் எந்த பொருட்களும் டாக்டருக்கு சென்று சேரவில்லை. இதனால் சந்தேகமடைந்த டாக்டர், ஆர்டர் செய்த பொருட்களை அனுப்புமாறு மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார். அவர்களிடம் இருந்து நம்பிக்கைக்குரிய பதில் ஏதும் வராததால், சந்தேகமடைந்த அவர் அப்போது தான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்துள்ளார். உடனடியாக, பெங்களூரு மகாடி (Magadi ) காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். இதனடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு மும்பையில் இதேபோல் ஆன்லைன் மூலம் இருசக்கர வாகனத்தை விற்பனை செய்ய முயன்ற இளைஞரை தொடர்பு கொண்ட 2 பேர் கொண்ட கும்பல், டெஸ்ட் டிரைவ் செல்வதாக கூறி பைக்கை திருடிச் சென்றனர். கவுகாத்தியில் ஆன்லைன் மூலம் லோன் கொடுப்பதாக கூறி 72,600 ரூபாயை ஒரு கும்பல் சுருட்டியது. இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த கும்பலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். ஆன்லைன் கொள்ளை குறித்து தொடர்ந்து விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதிக ஆசை காரணமாக ஒரு சிலர் பணத்தை இழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. தனிமனித விழிப்புணர்வு மட்டுமே இத்தகைய கொள்ளைகளில் இருந்து தப்பிக்கும் வழி என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  
Published by:Ram Sankar
First published: