ஐபோனைப் போல மிகவும் ஸ்மார்ட்டான வாட்டர் பாட்டிலை 5 ஆயிரம் ரூபாய்க்கு வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்... அதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
உறங்கிக் கிடக்கும் சிறு விதையை, உயர்ந்த விருட்சமாக்கும் தண்ணீர்... உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிருக்கும் இயற்கை அளித்த அன்பு பரிசு அது...
மழை நீர், ஆற்று நீர், ஊற்று நீர், கிணற்று நீர் என தண்ணீர் எத்தனை வகை இருந்தாலும், அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம் இதுவே.. அதனாலேயே, நீரின்றி அமையாது உலகு என்றார் அய்யன் வள்ளுவர்..
ஆறுகள், ஓடைகள், கிணறுகள், குளங்களில் மனிதர்கள் ஆண்டாண்டு காலமாக அள்ளிப் பருகிய தண்ணீர், இன்று உலகச் சந்தையில் மிக உயர்ந்த விற்பனைப் பொருள்...
10-15 ஆண்டுகளுக்கு முன்பு நகரங்களில் மட்டுமே விலை கொடுத்து வாங்கப்பட்ட வாட்டர் கேன்கள், இப்போது குக்கிராமங்களிலும் கோலோச்சி விட்டது என்றால் மறுப்பதற்கில்லை.. குழாயடி சண்டைகள் இப்போது குறைந்துவிட்டதற்கு இதுவும் ஒரு காரணம்...
மூன்றாம் உலகப் போரே நாம் அருந்தும் தண்ணீரில் தான் தொடங்கும் என்பது கவிஞர்கள் முதல் கல்வியாளர்களை வரை சொல்லும் கால் நூற்றாண்டு கருத்து...
அதை உறுதி செய்யும் விதமாக, உலகளவில் நம்மை உலுக்குகின்றன சில தண்ணீர் பாட்டில்களின் விலைகள்...
அமெரிக்காவின் பிவர்லி ஹில்ஸ் நிறுவனம், தனது ஒரு லிட்டர் தண்ணீர் கேனுக்கு தாராளமான நிர்ணயித்துள்ள விலை ரூ.65 லட்சம். 600 வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் அந்த வாட்டர் கேனின் பெயர் எச்2ஓ டயமண்ட் எடிசன்.
அக்வா டி க்ரிஸ்டல்லோ ட்ரிபுடோ எ மோடிக்லியாணி என்ற நிறுவனமோ, வாட்டர் கேன் மூடியை தங்கத்தில் செய்து விற்கும் விலை கொஞ்சம் குறைச்சல்... அதாவது ரூ.45 லட்சம் தான்.
ரூ.1,32,000க்கு நெவாஸ் என்ற நிறுவனமும், ரூ.90,000க்கு Bling என்ற நிறுவனமும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களை விற்றுக் கொண்டிருக்க, அந்த சந்தையில் தற்போது கால் பதிக்கிறது அமெரிக்க நிறுவனமான ஆப்பிள்.
ஆரம்பம் முதலே, வாழ்க்கையை ஸ்மார்ட் ஆக மாற்ற, எப்போதும் ஸ்மார்ட்டாக யோசிக்கும் ஆப்பிள், தற்போது அறிமுகம் செய்திருப்பது ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்...
ஹைட்ரேட் ஸ்பார்க் நிறுவனத்துடன் கைகோர்த்து களமிறங்கும் ஆப்பிள் வாட்டர் கேனின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 ,000 ஆகும்.
ஐபோன்களை வேரியண்ட்களில் வெளியிட்டே பழகிப் போனதாலோ என்னவோ, வாட்டர் கேனையும் ஹைட்ரேட் ஸ்பார்க் ப்ரோ, ப்ரோ ஸ்டீல் என்ற இரண்டு வேரியண்ட்களிலேயே வெளியிட்டிருக்கிறது ஆப்பிள்...
இந்த வாட்டர் பாட்டிலை வாங்க உங்களிடம் ஐபோன் அல்லது ஆப்பிள் வாட்ச் இருக்க வேண்டியது அவசியம்...
இப்போது வாட்டர் பாட்டிலையும் வாங்கிவிட்டால், ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் எது இருக்கிறதோ, அதனுடன் Sync செய்து கொள்வது கட்டாயம்...
அந்த நொடி முதல் உங்களது உடலின் தண்ணீர் அளவை கண்காணிக்கும் காவலனாக மாறிவிடுகிறது ஆப்பிளின் அந்த வாட்டர் பாட்டில்...
ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது உயரம், எடைக்கேற்ப, உடலுக்கு தேவையான நீரின் அளவும் மாறுபடுகிறது என்கிறது மருத்துவம்...
அந்த வகையில், நாள்தோறும் நாம் எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்; ஆனால், எவ்வளவு குடிக்கிறோம் என்பதை கணக்கிடுவதே இதன் முக்கிய பணி...
பாட்டிலின் கீழ்ப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. சென்சார் தான் நாம் குடிக்கும் தண்ணீரை கணக்கிடும் கால்குலேட்டர்...
ஆப்பிள் வாட்டர் பாட்டில் மூலம் நீர் குடிக்கும்போது, நமது உடலுக்கு கிடைக்கும் சத்துகளின் அளவை கணக்கிட்டு, ஆப்பிள் ஹெல்த் அப்ளிகேஷனுக்கு அப்போதே தகவல் அனுப்பும் இந்த சென்சார்...
உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் நேரத்தில் நாம் குடிக்காமல் தவிர்த்துவிட்டால், தயங்காமல் ஒளிர்ந்து தகவல் சொல்லும் எல்.இ.டி. லைட்டுகள்...
பல நோய்களுக்கு நீரே மருந்து என்ற மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்ற நினைப்பவர்களுக்கு ஆப்பிளின் இந்த வாட்டர் பாட்டில் ஒரு வரம்...
ஒருமுறை ஊற்றி வைக்கப்படும் குளிர்ந்த நீரை 24 மணி நேரம் வரை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும் இந்த ஆப்பிள் வாட்டர் பாட்டில், இப்போது கிடைப்பது அமெரிக்காவில் மட்டுமே...
இன்னும் சில மாதங்களில் இந்தியாவிற்கும் வந்துவிடும்... வரவேற்க தயாராவோம்...
- பெரிய பத்மநாபன்...
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.