ஆப்பிள் ஐஃபோன் 14 மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதற்கு இன்னும் வெகு காலம் காத்திருக்க வேண்டும். ஆனால், இந்த மாடலின் இறுதியான டிசைனுக்கு ஒப்புதல் பெறும் நடவடிக்கை தொடங்கியுள்ளதால் விரைவில் இதன் டிரையல் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் ஆப்பிள் ஐஃபோன் 14 மாடல்களை மாபெரும் அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ள அதே வேளையில், தற்போது குறைவான எண்ணிக்கையில் ஃபோன்களை தயாரிக்கும் டிரையல் உற்பத்தியை தொடங்கும் நடவடிக்கை தொடங்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டிரையல் உற்பத்தி செய்வதன் மூலமாக ஆப்பிள் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் பலன் என்ன என்றால், இந்த டிசைனை வைத்து இறுதியான உற்பத்தியை தொடங்குவதற்கு முன்பாக அதில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து கொள்ள முடியும்.
அதே சமயம், ஆப்பிள் ஐஃபோன் டிரையல் உற்பத்தி தொடங்கியிருக்கும் நேரம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று உள்ளது. ஒவ்வொரு மாடலை தயாரிக்கும் போதும் அதற்கான டிரையல் உற்பத்தியை பிப்ரவரி மாதத்தில் தான் ஆப்பிள் நிறுவனம் தொடங்குகிறது. ஆகவே, அடுத்த ஐஃபோன் 14 மாடலும் சரியான சமயத்தில் சோதிக்கப்பட்டு, விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் டிரையல் உற்பத்தியை நிறைவு செய்தவுடன், மூலதனப் பொருட்களுக்கான ரசீதுகளை ஆப்பிள் நிறுவனத்துடன் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். இதையடுத்து, மாபெரும் அளவில் உற்பத்தியை தொடங்குவதற்கு முன்பாக தர பரிசோதனை நடைபெறும்.
தற்போது வரை அறியப்படாத தகவல் என்ன என்றால், ஐஃபோன் 14 சீரீஸ் மாடல்களை தயாரிக்கப் போவது யார் என்பது தான். ஏனென்றால் கடந்த ஆண்டு ஐஃபோன் 13 ப்ரோ ஃபோன்கள் அடுத்தடுத்து வந்தபோது அவற்றை லக்ஸ்ஷேர் என்ற நிறுவனம் தயாரித்தது. தற்போது 14 சீரீஸ் மாடல்களை யார் உற்பத்தி செய்வது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read : ‘மேட் இன் இந்தியா’ பொருட்களுக்கு தனி ஸ்டோர்
ஐஃபோன் 14 ப்ரோ வருகிறதா?
ஐஃபோன் 14 மாடலை அறிமுகம் செய்யும் கையோடு, ஐஃபோன் 14 ப்ரோ மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஃபோன் 8 ஜிபி ரேம் வசதியை கொண்டதாக இருக்கலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22+ ஆகிய மாடல்களில் உள்ள அதே வசதிகளை இதிலும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
Also Read : மொபைல் பைத்தியமா நீங்கள்? - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஐஃபோன் மாடல்களில் இதுவரை அதிகபட்சமாக 6 ஜிபி ரேம் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்ற வகையில், அதிகபட்ச ரேம் வசதி கொண்டதாக 14 ப்ரோ இருக்கும் எனத் தெரிகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.