விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காகவும், விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காகவும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் விண்கலங்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் வீரர்கள், குறிப்பிட்ட காலம்வரை விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வர்.
தற்போது நாசாவும் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து வர்த்தக ரீதியிலான முதல் விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி உள்ளன. இதில் நாசாவின் விண்வெளி வீரர்கள் 3 பேர், ஜப்பானை சேர்ந்த ஒருவர் என 4 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
Also read: புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஆதார் PVC கார்டுகள்.. அதைப் பெறுவது எப்படி?
ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்துள்ள இந்த விண்கலத்தின் பெயர் டிராகன். புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள கேப் கனவெரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்கலம் ஏவப்பட்டதை அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், தனது மனைவியுடன் பார்வையிட்டார். அடுத்த 15 மாதங்களில் மேலும் 7 விண்கலங்கள் விண்ணில் ஏவப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் குவின் ஷார்ட்வெல் (Gwynne Shotwell) தெரிவித்துள்ளார்.
நாசாவின் அங்கீகாரத்துடன் விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் முதல் தனியார் விண்கலம் இது ஆகும். இந்த விண்கலத்தில் சென்றுள்ள விண்வெளி வீரர்கள் 6 மாதம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். ராக்கெட்டில் இருந்து விண்கலம் தனியாக பிரிந்து பயணிக்கத் தொடங்கியதும், ராக்கெட் பூஸ்டர் பூமிக்குத் திரும்பி, கடலில் ஒரு கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விண்வெளி பணிகளுக்காக பால்கன்-9 ராக்கெட்டை மறுபடியும் பயன்படுத்த முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: NASA, Spacecraft