மார்ச் 2, 2022 அன்று அமெரிக்காவில் உள்ள ஸ்விக்கி ட்ரான்சியன்ட் ஃபெசிலிட்டியில் எனும் வானியல் ஆய்வகத்தில் பரந்த-புல ஆய்வுக் கேமராயில் ஒரு அரிய வால் நட்சத்திரத்தை கண்டுள்ளனர். அது பூமியை நோக்கி வருவதையும் கண்டுபிடித்துள்ளனர்.
அரிதான அந்த பச்சை வால் நட்சத்திரத்துக்கு C/2022 E3 என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெயரிட்டது. வால் நட்சத்திரத்தை ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வுகளை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பச்சை வால் நட்சத்திரம் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த மாத இறுதியில் பூமியின் வட அரைக்கோளத்தில் வாழும் மக்களும், பிப்ரவரி தொடக்கத்தில் தென் அரைக்கோள மக்களுக்கும் தெரியும். அதை பகல் நேரங்களில் பைனாக்குலர் மூலமாகவும், இரவில் வெறும் கண்களாலும் பார்க்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
பச்சை வால் நட்சத்திரம் சூரியனை சுற்றி மிக நீண்ட ஒரு சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது. அது சூரிய மண்டலத்தின் வெளிப்புற பகுதிகள் வழியாக செல்வதால் சூரியனை ஒரு முறை சுற்றி வர சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வால் நட்சத்திரத்தின் சுற்றுபாதையின் நெருக்கமான புள்ளி பூமியிலிருந்து இருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அதன் செயற்பாடுகளை மக்கள் வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று யூகிக்கின்றனர்.
இந்த பச்சை வால்நட்சத்திரத்தை எப்படி அடையாளம் காண்பது என்று நீங்கள் யோசிக்கலாம். மாலுமிகளும் பயணிகளும் திசையைக் கண்டறிய உதவும் துருவ நட்சத்திரத்திற்கு அருகில் இந்த வால்நட்சத்திரத்தை காணலாம். நகரும்போது அதன் தூசிகள் வான்வெளியில் கலக்கும்போது பச்சை நிற வால் கொண்டதாகத் தெரியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.