இந்தியாவில் ஆகஸ்ட்- செப்டம்பர் மாதத்தில் 5ஜி அறிமுகப்படுத்தப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் 20 முதல் 25 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு 4ஜி சேவை தொடங்கப்பட்டது. அதன் பின்னர் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. ஜியோ நிறுவனம் மலிவு விலையில் இணைய திட்டங்களை அறிமுகப்படுத்திய பின்னர், இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. 2014-ம் ஆண்டில் ப்ராட்பேண்ட் பயனாளர்களின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்த நிலையில் தற்போது 80 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், 4ஜி சேவையை தொடர்ந்து 5ஜி எனப்படும் அதிவேக இணைய வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இநிலையில், ‘5ஜி அலைக்கற்றைக்கான ஏலப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட்-செப்டம்பரில் 5ஜி சேவை உள்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும். நிகழாண்டு இறுதிக்குள் 20 முதல் 25 நகரங்களில் இந்தச் சேவையை அறிமுகம் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆண்ட்ராய்டு Tablets மற்றும் iPad மாடல்கள்.!
சா்வதேச கட்டணங்களை ஒப்பிடுகையில் தற்போது டேட்டா சேவைக்கான விலை இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளது என தெரிவித்த அவர், டேட்டா சேவைக்கான சர்வதேச சராசரி 25 டாலராக உள்ள நிலையில், இந்தியாவில் இது வெறு 2 டாலர்களாக உள்ளதாக குறிப்பிட்டார். 4ஜி மற்றும் 5ஜி சேவையை இந்தியா மேம்படுத்தி வருகிறது. மேலும், உலக அளவில் எண்ம (டிஜிட்டல்) நெட்வொா்க்குகளில் நம்பகமான நிலையை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இதையும் படிக்க: Gmail யூஸர்களே உஷார்... மெயில் மூலம் நடக்கும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்!
தொடர்ந்து பேசிய அவர், சமூக ஊடக தளங்கள் அதிக பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்பதில் தெளிவான மற்றும் ஒருமித்த கருத்து பொதுமக்களிடையே உருவாகியுள்ளது. அவ்வாறு பொறுப்பேற்கச் செய்ய வேண்டுமெனில் அதற்கான சட்ட விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு அதற்கான பணிகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது என்றார். தற்போதைய கணிப்புகள் படி 5ஜி சேவை என்பது 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.