சமீப காலங்களில் வணி நிறுவனங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக கிளவுட் எனப்படும் தொழில்நுட்பத்திலான அலுவலங்களை அமைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் வணிக நிறுவனங்களையும், அவற்றை சார்ந்து அணைத்து துறைகளையும் மிகவும் பாதிக்கும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது இணைய வழி தாக்குதல்கள்.
அடுத்து வரும் வருடங்களில் டிஜிட்டல் முறையில் ஏற்படும் வளர்ச்சியினாலும், தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகரித்துள்ள முதலீடுகளின் மூலமும், உலகம் முழுவதும் அனைத்து துறைகளிலும் இனிய வழி வணிகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி டிஜிட்டல் முறையில் வணிகங்களை மாற்றி அமைப்பதற்காக மட்டும் உலகம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
டிஜிட்டல் முறை வணிகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசுர வளர்ச்சியானது புதிய வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் வணிகத்தில் சில புதிய அச்சுறுத்தல்கள் உண்டாவதற்கும் வழி வகுத்துள்ளது. அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வரும் இத்தகைய சூழ்நிலையில் சைபர் கிரிமினல் எனப்படும் தகவல் தொழில்நுட்ப வழிகளின் மூலம் கணினிக்கு பின் மறைந்து கொண்டு மோசடி செய்யும் முகம் தெரியாத நபர்களினால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் உண்டாகியுள்ளது.
இந்த சைபர் கிரிமினல்ஸ் எனப்படும் இணைய வழி தாக்குதல்களை நடத்தும் முகம் தெரியாத குற்றவாளிகள், புதிய புதிய முன்னேறிய தொழில்நுட்பங்களைக் கொண்டு மிக பெரும் நிறுவனங்களின் தகவல்களை திருடுகின்றனர். மேலும் அவர்களின் வாடிக்கையாளர்களுடைய தகவல்களை இணையத்தில் வெளியிட்டும், அவர்களின் தகவல்களை மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது போன்ற குற்றங்களின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதனால் அந்த நிறுவனங்களுக்கு மிகப்பெரும் அளவில் பண இழப்பு ஏற்படுவதுடன், அவர்களுடைய நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் உண்டாக வழி செய்கிறது. இதனால்தான் பல்வேறு வணிக நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துவதற்காக மிக அதிகமான பணத்தை முதலீடு செய்ய உள்ளனர். முக்கியமாக இணைய வழியில் நடக்கும் தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், தங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகப்பதயுமே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளனர்.
முக்கியமாக இந்தியாவில் தான் சைபர் அட்டாக்ஸ் எனப்படும் இணைய வழி தாக்குதல்கள் அதிகம் நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றுவதற்கு பிறகு 68% நிறுவனங்கள் இந்த இணைய வழி தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிறுவனங்கள் மட்டுமின்றி தனி நபர்கள் மீதும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவர்கள் வங்கி கணக்கு திருட்டு, பணம் திருட்டு போன்ற பல குற்றங்கள் அரங்கேறியுள்ளன என்பது குறிப்பிட தக்கது.
இந்தியாவில் 10-ல் 7 நிறுவனங்கள் ரான்சம் வேர் அட்டாக் (Ransomware) எனப்படும் இணைய வழி தாக்குதலினால் மூலம் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் 2022 ஆம் ஆண்டின், முதல் பாதியில் மட்டும் 674,000 -க்கும் அதிகமான இணைய வழி தாக்குதல்கள் இந்தியாவில் மட்டும் நடந்துள்ளதாக அறிக்கைகள் கிடைத்துள்ளது.
இந்த காரணத்தினால் தான் அடுத்து வரும் 2023 ஆம் ஆண்டில், பல்வேறு வணிக மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் தங்களது பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கு, மிகப்பெரும் அளவிலான பணத்தை முதலீடு செய்ய போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் பல நிறுவனங்கள் சில வருடங்களுக்கு முன்பே இந்த வேலையை துவங்கி விட்டனர் என்பது குறிப்பிடதக்கது. அதேசமயம் இணைய வழி தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளின் எண்ணிக்கையும், அதிகரித்து கொண்டே இருப்பதினால், மிக அதிக எண்ணிக்கையிலான இணைய வழி தாக்குதல்கள் நடைபெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கான அச்சுறுத்தல் :
உலகம் முழுவதும் தங்களுடைய கிளைகளை பரப்பி செயல்பட்டு வரும் என்டர்பிரைஸ் நிறுவனங்கள் தான் இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் என தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் பல்வேறு நிறுவனங்களும் கிளவுட் தொழில்நுட்பத்திற்கு தங்கள் அலுவலகங்களை மாற்றி வருகின்றன. இந்த கிளவுட் தொழில்நுட்பம் மூலம் தங்களுக்கென தனித்தனியாக வெளிப்புற சர்வர்கள் ஏதும் இல்லாமலேயே, அனைத்து கிளைகளுக்கும் குறிப்பிட பொதுவான நினைவகங்கள் மற்றும் சர்வர்களை அமைத்து, கிளவுட் தொழில்நுட்பத்தின் மூலம் தரவுகளை பதிவேற்றம் செய்தும், அதிலிருந்து தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்தோ அல்லது நேரடியாகவே ஆன்லைனில் இருந்து கொண்டும் வேலை பார்க்க முடியும். இதன் மூலம் நிறுவனங்களின் பராமரிப்பு செலவு குறைவதோடு, மிக எளிமையாக வேலை செய்வதற்கும் ஏதுவாக உள்ளது.
இந்த காரணத்தினால் தான் இணைய வழித் தாக்குதல்கள், இந்த கிளவுட் தொழில்நுட்பத்தை குறிவைத்து தாக்கப்படும் போது அந்த நிறுவனங்கள் மிகப்பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றன. இதனால் அந்தந்த நிறுவனங்களில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர் குழுக்கள், தங்களது நிறுவனத்தின் தகவல்களை பாதுகாப்பதற்காக மிக அதிக அளவிலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி, இணைய வழி தாக்குதல்களுக்கு ஒரு நிறுவனம் உட்பட்டால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். நிறுவனங்களின் தகவல்கள் திருடப்படுவதோடு அதனுடைய முக்கிய கோப்புகளிலும் மாற்றங்கள் செய்ய முடியும். இதனால் அந்நிறுவனம் திவாலாகி போவதற்கு கூட வாய்ப்புகள் உண்டு மேலும் நிறுவனத்தின் புகழும் பாதிக்கப்படும். இந்த பிரச்னை தான் வரும் காலங்களில் தகவல் தொழில்நுட்ப துறையின் பெரும் சவாலாக இருக்கும்.
இந்த கிளவுட் தொழில்நுட்பங்களின் மீது நடத்தப்படும் இணைய வழி தாக்குதல்கள் கடந்த ஒரு வருடத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. அதிலும் முக்கியமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பிறகும், கொரோனா தொற்றுக்குப் பிறகும் இணைய வழி தாக்குதல்கள் நடத்தும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அசுர அளவில் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் சிறிய நிறுவனம், பெரிய நிறுவனம் என்ற வித்தியாசமின்றி அனைத்து அளவிலான வணிக நிறுவனங்களும் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றத்தை ஊக்குவித்து வருகிறது. மிக எளிதாக உட்கார்ந்த இடத்திலிருந்து பணப்பரிவர்த்தனை செய்ய முடிவதாலும், எங்கே சென்றாலும் நம் கூடவே பணத்தை எடுத்து செல்ல தேவையில்லை என்பதாலும் மக்களும், வாடிக்கையாளர்களும் இதனை அதிகம் விரும்புகின்றனர்.
அளவு அதிகரிக்க சேதமும் அதிகரிக்கும் :
2021 ஆம் ஆண்டு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் நிறுவனத்தினுடைய தகவல்கள் இணையத்தில் கசிந்தன. இணைய வழி தாக்குதல் நடத்துபவர்களின் மிக முக்கிய குற்றச்செயலாக அது உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டது. மேலும் உலகம் முழுவதும் சைபர் அட்டாக்ஸ் அதிகரித்து வருவதற்கான அறிகுறியாகவும் அது அறியப்பட்டது. இணையத்தில் தகவல்கள் கசிவதன் மூலம் உண்டாகும் நஷ்டமானது, வருடத்திற்கு சராசரியாக 3.89 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 4.96 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
முக்கியமாக கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு உலகம் முழுவதும் பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக நிறுவனத்தில் ஏற்பட்ட தகவல் திருட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு கிட்டத்தட்ட 58 நாட்கள் வரை கூடுதலாக எடுத்துக் கொள்வதாக தெரியவந்துள்ளது. இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது வணிக நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செலவழிக்கப்படும் பணத்தின் எண்ணிக்கை மட்டும் 2030 ஆம் ஆண்டில் 433 பில்லியன் அமெரிக்க டாலரை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதில் கூடுதல் பிரச்சனையாக தற்போது 5g சேவை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நிறுவனங்களுக்கு வசதியாக இருந்தாலும், இணைய வழி தாக்குதலை தொடுக்கும் குற்றவாளிகளுக்கும் இது இன்னும் அதிக கதவுகளை திறந்து விட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இணையம் வழியே தகவல்கள் பரிமாறப்படுவது இன்றைக்கும் கணக்கில் அடங்காத வகையில் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக குறிப்பிட்ட தாக்குதலை கண்டறிவதும் அதனால் ஏற்பட்ட சேதத்தை உடனடியாக கண்டறிவதுமே மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதில் சில நிறுவனங்கள் முறையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமலேயே வணிகத்தை மேற்கொள்ளும் நிலையில் அவை குற்றவாளிகள் நடத்துவதற்கு மிக எளிதான குறியாக மாறிவிடுகின்றனர்.
இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் டிஜிட்டல் புரட்சியானது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதோ, அதிக அளவிற்கு இணையம் வழி நடத்தப்படும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்பதை மறுக்க முடியாது. இதன் காரணமாக ஒவ்வொரு நிறுவனமும் தங்களது பாதுகாப்பு அம்சத்தில் சிறப்பு கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பேரழிவிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். முக்கியமாக இந்தியா போன்ற இணைய வழி தாக்குதல்கள் அதிகம் நடக்கும் நாடுகளுக்கு இது பெரும் சவாலாக அமைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Tamil Nadu