முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மனைவி, மகனை கைவிட்டுவிட்டேனா? குற்றச்சாட்டுகளுக்கு Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விரிவான பதில்..!

மனைவி, மகனை கைவிட்டுவிட்டேனா? குற்றச்சாட்டுகளுக்கு Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விரிவான பதில்..!

ஸ்ரீதர் வேம்பு

ஸ்ரீதர் வேம்பு

தனது மனைவி பிரமிளா முன்வைத்த குற்றசாட்டுகளுக்கு சோஹோ நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு பதிலளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை புறநகர் பகுதியில் இயங்கும் சோஹோ நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை செயல் அதிகாரியுமாக இருப்பவர் ஸ்ரீதர் வேம்பு. போபர்ஸ் தகவலின்படி ஸ்ரீதர் வேம்புவின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலராக உள்ளது. சோஹோ நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் ஸ்ரீதர் வேம்பு தனது மனைவி பிரமிளாவுடன் வசித்து வந்தார். எனினும், கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்த அவர் தற்போது தென்காசி மாவட்டத்தில் வசித்து வருகிறார். ஸ்ரீதர் வேம்புவும் அவரது மனைவியும் விவாகரத்து கோரி கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி அளித்த புகார் விவரங்களை அமெரிக்காவின் வணிக இதழான போபர்ஸ் செய்தியாக்கியுள்ளது. அதில், பிரமிளா “நானும் எனது கணவர் ஸ்ரீதர் வேம்பும் 29 வருடங்கள் ஒன்றாக இருந்தோம். 2020ம் ஆண்டு தமிழ்நாடு திரும்பிய பிறகு அவர் என்னையும், மகனையும் கைவிட்டுவிட்டார். என் மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பும், உடல் ரீதியாக சில பாதிப்புகளும் உள்ளன. ஆனால், எங்களை அவர் கவனிக்கவில்லை.

சோஹோ நிறுவனத்தில் அவருக்கு இருந்த பங்குகள் மற்றும் சொத்துக்களை எனக்கு தெரியாமலேயே அவரது குடும்பத்தினருக்கு மாற்றிவிட்டார்.  கலிபோர்னியாவில் உள்ள குடும்ப சொத்து சட்டத்தின்படி, கணவன் - மனைவி தங்களது இணையைக் கேட்காமல் சொத்துக்களை மாற்ற முடியாது. குடும்பச் சொத்து என்பது கூட்டு சொத்து என்று கூறப்பட்டுள்ளது.  ஆனால், என்னிடம் கேட்காமல் பங்குகளை மாற்றியுள்ளார்.” என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதற்கு ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீதர் வேம்பு விரிவாக பதிலளித்துள்ளார். அதில், “எனது வணிக வாழ்க்கையை விட தனிப்பட்ட வாழ்க்கை சோகம் நிறைந்தது. எனது மகனுக்கு ஏற்பட்ட ஆட்டிசம் பாதிப்பு எங்கள் வாழ்க்கையை சிதைத்தது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனச் சோர்வடையச் செய்தது. நானும் எனது மனைவியும் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டிசத்திற்கு எதிராக போராடி வருகிறோம். பிரமிளா ஒரு சூப்பர் மதர். எங்களது மகனின் ஆட்டிசம் பாதிப்பை குணப்படுத்த வேண்டும் என்பதே அவரின் முக்கிய நோக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக தங்கள் திருமண வாழ்க்கையின் முடிவு ஒரு புதிய மோதலைக் கொண்டு வந்ததாக கூறியுள்ள அவர், “சோஹோ நிறுவனத்தில் என்னுடைய உரிமை குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார். நிறுவனத்தில் உள்ள எனது பங்குகளை நான் வேறு யாருக்கும் மாற்றியதில்லை.

நான் பிரமிளாவையும் எனது மகனையும் பொருளாதார ரீதியாக கைவிட்டுவிட்டேன் என்று சொல்வது கற்பனை. அவர்கள் என்னை விட பணக்கார வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். நான் அவர்களுக்கு முழு ஆதரவை தருகிறேன். நான் எப்போதும் பிரமிளாவையும் என் மகனையும் ஆதரித்து வருகிறேன், நான் வாழும் வரை அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன்” என்று பதிலளித்துள்ளார்.

First published:

Tags: Sridhar Vembu