Home /News /tamil-nadu /

யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் போலீசாரால் கைது

யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் போலீசாரால் கைது

Maridhas

Maridhas

மாரிதாஸ் கைதை கண்டித்து வலதுசாரி ஆதரவாளர்களும், பாஜகவினரும் பெருமளவில் திரண்டு கோஷங்கள் எழுப்பியதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்தார் என்ற புகாரின்பேரில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சமூக வலைத்தளங்களில் பிரபலமாக திகழும் மதுரையைச் சேர்ந்த மாரிதாஸ், வலதுசாரி சிந்தனையாளராக அறியப்படுகிறார். இவர் maridhas Answers என்ற பெயரில் நடத்தி வரும் யூடியூப் சேனலில் திமுகவை கடுமையாக விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

    இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமீபத்தில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் மறுநாள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் போலீசார் அடித்ததால் தான் மாணவர் உயிரிழந்ததாக கூறி வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென, மணிகண்டனின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    மாணவர் மணிகண்டன் இறப்பு விவகாரம் குறித்து யூடியூபர் மாரிதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    இன்று காலை யூ டியூபர் மாரிதாஸ் அவருடைய டிவிட்டர் பக்கத்தில், "திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா.
    தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்" என்ற வார்த்தைகளுடன் பதிவிட்டு இருந்தார்.

    அந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர் அதை தனது பக்கத்தில் இருந்து நீக்கிய நிலையில், மதுரை புதூர் காவல்நிலைய போலீசார், 153 A, 505 ஆகிய பிரிவுகளில் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்தல், அரசு உயர் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் பதிவிடுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    இன்று மதியம் மதுரை - சூர்யா நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் கைது செய்ய போலீசார் சென்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் குவிந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

    போலீசாரை கைது செய்ய விடாமல் பாஜகவினர் இடையூறு செய்த நிலையில், போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பின்னர் போலீசார் குவிக்கப்பட்டு, மாரிதாஸ் கைது செய்யப்பட்டு அவருடைய சொந்த வாகனத்தில் புதூர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்.

    காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் போலேசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் காவல் நிலையத்திற்கு வெளியே ஐம்பதுக்கும் மேற்பட்ட பாஜகவினர் குவிந்துள்ளனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி