Home /News /tamil-nadu /

இந்து தெய்வங்களை அவமதிக்கும் யூடியூப் சேனல்கள்.. அரசு வேடிக்கைப் பார்ப்பது நியாயமா? பாஜக கேள்வி

இந்து தெய்வங்களை அவமதிக்கும் யூடியூப் சேனல்கள்.. அரசு வேடிக்கைப் பார்ப்பது நியாயமா? பாஜக கேள்வி

யூடியூப்

யூடியூப்

யூடு புரூட்டஸ் போன்ற யூடியூப் சேனல் நடத்துபவர்கள் மீதும், அதில் தெய்வங்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீதும், தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கரு.நாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

  திமுக அரசும், தமிழக காவல்துறையும் இந்து தெய்வங்களை அவமதிக்கும் செயல்களை, வேடிக்கை பார்ப்பது நியாயமா? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

  இதுதொடர்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து தெய்வங்களை போற்றும் மிகப்பெரும்பான்மை மக்கள் வாழும் தமிழகத்தில் இந்து உணர்வுகளையும், தொன்றுதொட்டு இருந்து வரும் ஆன்மீக உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் காயப்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தோடும், அதன் மூலம் சமூகத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட சிந்தனையோடும் சிலர் கெடு மதியோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

  ஏற்கனவே தமிழ்க்கடவுள் முருகனைப் போற்றும் கந்த சஷ்டி கவசத்தை கேலி, கிண்டல் செய்து தமிழக மக்களின் ஆன்மீக உணர்வுகளை வேதனைப்படுத்திய கயவர் கூட்டமான கறுப்பர் கூட்டத்தின் செயல்கள் இன்றும் தமிழ் மக்களின் இதயங்களில் ஆறாத வடுக்களாய் இருக்கிறது.

  Also read... போலி சாதிச்சான்று அளித்த அறிவியல் உதவியாளருக்கு கட்டாய ஓய்வு - நீதிமன்றம் உத்தரவு

  அதே போன்று மேலும் சில யூடியூப் சேனல்கள் இப்போது செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். அதில் யூடு புரூட்டஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் மைனர் விஜய் என்பவர் இந்து கடவுள்களை தொடர்ந்து மிக ஆபாசமாக விமர்சித்து வருகிறார்.

  சமீபத்தில் “தில்லை நடராஜர் ஏன் காலைத் தூக்கி ஆடுகிறார்” என்று அவர் பேசியுள்ள வீடியோ, ஆபாச அறுவெறுப்பின் உச்ச கட்டம். இதுபோன்று பேச முற்படுபவர்களின் அடி மட்டமான சிந்தனைகள் எப்படி இருக்கும் என்பதையும், அவர்கள் உள்நோக்கத்தையும் எளிதில் தமிழக மக்கள் புரிந்து கொள்ள முடியும்.
  இது குறித்து தமிழக காவல்துறை தலைவருக்கு சமூக ஆர்வலர்களும், முக்கிய அமைப்புகளின் தலைவர்களும் புகார் கடிதம் கொடுத்தும் காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது எதைக் காட்டுகிறது? தமிழக அரசின் ஆசியோடு தான் இதுபோன்ற புல்லுருவிகள் செயல்படுகிறார்களா? என்று எண்ணத்தோன்றுவது நியாயம் தானே?

  தமிழக மக்களின் ஆன்மீக உணர்வுகளை கொச்சைப்படுத்தும் பலர் தமிழகத்திலே உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு துணை போகும் செயலில் ஆளும் அதிகாரத்தில் இருப்பவர்களும் ஒத்துப் போகிறார்களா? என்ற எண்ணம் தமிழக மக்களிடையே வளர்ந்து வருகிறது!

  மத நல்லிணக்கத்திற்கும், சமூக அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் யூடு புரூட்டஸ் போன்ற யூடியூப் சேனல் நடத்துபவர்கள் மீதும், அதில் தெய்வங்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீதும், தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தமிழகத்தில் வாழும் எட்டரை கோடி இந்து சமுதாய மக்களின் கோரிக்கை ஆகும்.

  தமிழக அரசு இது போன்ற கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. திமுக மற்றும் முதல்வர் குறித்து கருத்துச் சொல்லக்கூடிய பலர் மீதும் உடனடி சட்ட நடவடிக்கை, கைது நடவடிக்கை , பொய்யான நடவடிக்கை மேற்கொள்ளும் திமுக அரசும், தமிழக காவல்துறையும் இந்து கடவுள்களை அவமதிக்கும் சம்பவங்களை மட்டும் வேடிக்கை பார்ப்பது என்ன நியாயம்? மக்கள் கண்களை மூடிக் கொண்டு அமைதியாக இருக்கிறார்கள் என்று நினைத்து விடாதீர்கள்! மனதளவில் குமுறிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

  திமுக அரசும், தமிழக காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.யூடு புரூட்டஸ் யூடியூப் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று அமைதியை விரும்புகின்ற, கலாச்சாரத்தை பாதுகாத்து வருகின்ற, கோடான கோடி தமிழ் நல்லுள்ளங்கள் சார்பிலும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: BJP, Youtube

  அடுத்த செய்தி