YOUTHS WHO TOOK THE VIDEO OF THE POLLING BOOTH BOUGHT MONEY FROM THE PARTICULAR PARTIES IN SRIVILLIPUTHUR VAI
வாக்குப் பதிவை வீடியோ எடுத்த இளைஞர்கள்.. கட்சிகளிடம் பணம் வாங்கியது உண்மையா ?
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில், கிராமம் ஒன்றில் வாக்களித்த இளைஞர்கள், தாங்கள் வாக்களித்த நிகழ்வை செல்போனில் வீடியோவாக எடுத்து, சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் பணம் வசூலித்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்த இளைஞர்கள் யார்?
வாக்குச்சாவடிக்குள் நுழைந்த இளைஞர்கள், தாங்கள் வாக்களிக்கும் நிகழ்வை வீடியோவாகப் பதிவு செய்து அதையும் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். நடந்தது என்ன?
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, வாக்குச்சாவடிக்குள் செல்போன்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் வழக்கம்போல பல விதிமுறைகளைப் போலவே இந்த விதிமுறையும் காற்றில் பறக்கவிடப்பட்டது. பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் செல்போன்களுடன் உள்ளே சென்று வாக்களித்து விட்டு வந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ளது பிள்ளையார்நத்தம் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், தேர்தல் நாளன்று இளம் வாக்காளர்கள் சிலர் வாக்களிக்கச் சென்றுள்ளனர். அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரிக்குத் தெரியாமல், தனது சட்டைப் பையில் இருந்த செல்போனின் கேமராவை இயக்கியபடியே உள்ளே சென்றுள்ளனர். விரலில் மை வைப்பதில் தொடங்கி, வாக்களிப்பது, விவிபேட் இயந்திரத்தில் வாக்களித்தமைக்கான சான்று வருவது வரை வீடியோ எடுத்துள்ளனர்.
அந்த வீடியோவில் 3 குறிப்பிட்ட கட்சிகளின் சின்னங்களுக்கு அவர்கள் வாக்களித்த நிகழ்வு பதிவாகியுள்ளது. இந்த வீிடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வாக்களிக்கும் வீடியோவைக் காண்பித்து சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் இளைஞர்கள் பணம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டபோது விசாரித்து வருவதாகத் தெரிவித்தார். போலீசாரிடம் கேட்டபோதோ இதுவரை அதிகாரபூர்வ புகார் வராததால் தாங்கள் விசாரணை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
வாக்களிக்கும் நிகழ்வை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதோடு கட்சிகளிடம் பணமும் பெற்ற இளைஞர்கள் சிக்குவார்களா?