செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழையனுார் சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான விவேக். இவர் மாமண்டூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் சரக்கு ஏற்றி இறக்கும் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். தனது தந்தையின் மருத்துவ செலவுக்காக GET RUPEE DOT COM என்ற ஆன்லைன் செயலியில் நான்காயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்தக் கடனுக்கு 300 ரூபாய் வட்டி சேர்த்து நான்காயிரத்து 300 ரூபாய் அவர் செலுத்த வேண்டும்; ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதமாகியுள்ளது.
அதனால், கடன் கொடுத்த செயலியில் இருந்து, விவேக்கின் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், விவேக் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றும். அவரைத் திருப்பிச் செலுத்த சொல்லும்படியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடனைத் திருப்பிச் செலுத்தாவிடில் விவேக் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டி வரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதோடு நிற்காமல், இந்த நபர் உங்கள் செல்போன் எண்ணை வைத்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த நண்பர்கள், விவேக்கை அழைத்து விசாரித்துள்ளனர். இதனால் அவமானமடைந்த விவேக், பழையனூர் சாலை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பெற்றோரும் உறவினர்களும் தேடிப் பார்த்த போது கிணற்றில் அவரது சடலம் கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த படாளம் போலீசார், மதுராந்தகம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி விவேக்கின் உடலை மீட்டனர். சடலம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 23 வயதான சாய் அரவிந்தன் என்ற இளைஞர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய அவர் அதில் அதிகளவில் பணத்தை இழந்துள்ளார். அந்தக் கடனை ஈடுகட்ட ஆன்லைனில் கடன் வழங்கும் செயலி ஒன்றில் கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் அதுகுறித்து அவரது நண்பர்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
நண்பர்கள் விசாரிக்கவே அவமானமடைந்த சாய் அரவிந்தன் தற்கொலை செய்து கொண்டார். இவ்வளவுக்கும் சாய் அரவிந்தன் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் எப்படி செயல்படுகின்றன? அவை சட்டத்திற்கு உட்பட்டு இயங்குகின்றனவா? ஆன்லைனில் 2000 ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் செயலி்கள் உள்ளன.
சில ஆயிர ரூபாய்கள் கடனாக வழங்கி அதிகளவில் வட்டி போட்டு பணம் பறிப்பதுதான் இந்த செயலிகளின் நோக்கம் இவற்றில் பல நமது நாட்டில் அனுமதியின்றி செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
தொண்டரை தள்ளிவிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: இணையத்தில் வைரலாகும் வீடியோ
2000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை கடன் வழங்கும் செயலிகளின் பயன்பாடு இந்த கொரோனா காலகட்டத்தில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை மட்டும் இருந்தால் போதும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பல லட்சம் பேர் ஆன்லைனில் கடன் வழங்கும் செயலி்களைத் தரவிறக்குகின்றனர்.
இந்த செயலிகள், செல்போனில் உள்ள அனைத்து தொடர்பு எண்களையும் அணுகுவதற்கு அனுமதி பெற்ற பின்புதான் செயல்படவே தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், கடன் வாங்கும் நபர், பிணையமாக தனது உறவினர் மற்றும் நண்பர் என இரண்டு நபர்களை அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.
வாடிக்கையாளர் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், சம்பந்தப்பட்ட செயலி நிறுவனத்தில் இருந்து இந்த இரண்டு நபர்களுக்கு மட்டுமின்றி, செல்போனில் உள்ள பெரும்பான்மையான தொடர்பு எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இது தவிர காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, செயலி நிறுவனத்தின் பல எண்களில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும்.
கடன் வாங்கிய சிறிய தொகைக்கு இவ்வளவு அதிகளவிலான தொந்தரவுகளும் மனஉளைச்சல்களும் வரும் என எதிர்பார்த்திராத வாடிக்கையாளர், இறுதியில் தற்கொலை முடிவை நாடுவார் என்கின்றனர் சைபர் கிரைம் நிபுணர்கள்.
ஆன்லைனில் கடன் வழங்கும் நம்பகமான நிறுவனங்களைக் கூட மிக மிக அவசியம் இருந்தால் மட்டுமே நாட வேண்டும். மேலும் தேவைக்கு மட்டும் அவற்றைப் பயன்படுத்தி விட்டு விலகி விடுவதே பாதுகாப்பானது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
-------------------------------------------------------------------------------------------
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commit suicide, Crime | குற்றச் செய்திகள், Loan app, Online application