சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகம் அருகே இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த காரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தேவசகாயம் என்ற காவலர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டார். அப்போது காரினுள் இளம்பெண் ஒருவர் பின்னால் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்களை செருப்பால் அடித்து கூச்சலிட்டார். இதனைப் பார்த்த காவலர் உடனடியாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வருவதற்குள் இரண்டு இளைஞர்கள் தப்பி ஓடினர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த ஒரு இளைஞரையும் இளம் பெண்ணையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 23 வயதான அந்த இளம்பெண் ஆன்லைனில் ஆடைகள் மற்றும் பெண்களுக்கு தேவையான அழகு பொருட்கள் விற்பனை செய்து வருவதுடன், நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் பகுதிநேர டான்சராகவும் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
அதேபோல நேற்று இரவு 9 மணி அளவில் நட்சத்திர விடுதிக்கு பகுதி நேர டான்ஸர் பணிக்கு சென்ற அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் சக டான்சர்களுடன் சண்டையிட்டு நட்சத்திர விடுதியின் வெளியே வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்
அப்போது நட்சத்திர விடுதியில் விடிய விடிய மது குடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வேலூரை பூர்வீகமாக கொண்டு சென்னை துரைப்பாக்கத்தில் ஐ.டி துறையில் பணியாற்றி வரும் கௌதம்(24) மற்றும் அவரது நண்பர்களான தீபக், சக்தி ஆகியோர் மது போதையில் நின்றிருந்த இளம்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து தாங்கள் செல்லும் இடத்தை தாண்டித்தான் நாங்கள் செல்கிறோம் எங்களுடன் வாருங்கள் என அழைத்துள்ளனர்.
23 வயதான அந்த இளம்பெண்ணும் அளவுக்கு அதிகமான மது போதையில் காரின் பின் சீட்டின் நடுவில் அமர்ந்து கொள்ள தீபக் மற்றும் சக்தி ஆகியோர் இளம் பெண்ணிற்கு இருபுறமும் அமர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் நட்சத்திர விடுதியை விட்டு செல்லும் போதே இளம்பெண்ணுக்கு மூவரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் மூவரையும் செருப்பால் அடித்துக் கொண்டே கூச்சலிட்டு வந்துள்ளார். இந்த நிலையில்தான் இலங்கை தூதரகம் அருகே காவலர் தேவசகாயம் இவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட நுங்கம்பாக்கம் போலீசார் கௌதம் மற்றும் அவர்களது நண்பர்களான தீபக், சக்தி ஆகியோர் மீது பெண் வன்கொடுமை சட்டம், பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல், காயம் ஏற்படுத்துதல் மற்றும் பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் செயல் செய்தல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் கௌதமை கைது செய்து சிறையில் அடைத்த நுங்கம்பாக்கம் போலீசார் தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களான தீபக் மற்றும் சக்தியை தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.