கிருஷ்ணகிரியில் போலியாக கொரோனா நெகடிவ் சான்றிதழ் தயாரித்த இளைஞர் கைது

Youtube Video

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், ஆன்லைன் டிக்கட் புக்கிங் மூலம் போலி கொரோனா சான்று தயாரித்து விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் இறங்கியுள்ளன.அதன்படி, வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புவோர் 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என பல மாநிலங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சுற்றுவட்டாரங்களில் கிரானைட் தொழிற்சாலைகள் உள்ளன.இவற்றில் அதிக எண்ணிக்கையில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

  கொரோனா பாதிப்பால் வேலை போய் விடுமோ என்ற பயத்தில் இவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டுதான் போலி சான்றிதழ்களைத் தயாரித்துள்ளார் 29 வயதான தினேஷ்

  பர்கூர் அடுத்த சத்தலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், பர்கூரில், திருப்பத்தூர் சாலையில் லட்சுமி கணபதி ஆன்லைன் புக்கிங் அலுவலகம் நடத்தி வருகிறார்.அதில், ரயில், விமானம் மற்றும் சொகுசு பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து கொடுத்து வந்தார்.  இந்த நிலையில், வடமாநிலத் தொழிலாளர்களின் பயண தேவையை பயன்படுத்தி கொரோனா நெகட்டிவ் போலி சான்றிதழ்களைத் தயாரித்துக் கொடுக்கத் தொடங்கியுள்ளார்.ஒரு சான்றிதழுக்கு 2500 ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.சான்றிதழில் பர்கூர் அரசு மருத்துவமனையின் போலி சீல், மருத்துவரின் போலி கையெழுத்து ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளார் தினேஷ்.

  இதுகுறித்து தகவல் அறிந்த பர்கூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலரின் புகாரின் பேரில், தினேஷைப் போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து கம்ப்யூட்டர் மற்றும் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்; இந்த மோசடியின் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: