முதலமைச்சர் சாலையில் செல்லும் போது அவரது பயணத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்துகள் சீராக்கப்பட்டு மற்ற போக்குவரத்துகள் மற்றும் தனி நபர்கள் யாரும் சாலையில் குறுக்கே வராமல் இருக்க பலத்த பாதுகாப்பு செய்யப்படும். இந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வர்
ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது, தலைமை செயலகத்திலிருந்து போர் நினைவு சின்னம் வந்துக்கொண்டிருந்த போது, கான்வாய் குறுக்கே ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் முதல்வர் கான்வாயை முந்தி சென்றுள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் நேப்பியர் பாலம் அருகேயுள்ள சோதனை சாவடியில் அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர்.
தலையில் ஹெல்மெட் அணியாமல் வாகன பதிவெண் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் மீது சந்தேகம் எழுந்ததால் போலீசார் அவரை கோட்டை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
Read More : மதுஅருந்துவதில் தகராறு.. லாரியை ஏற்றி இருவர் கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
விசாரணையில் அந்த இளைஞர் கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்(22) என்பது தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர் ஓட்டி வந்த வாகனம் எம்.ஜி.ஆர் நகரில் திருடி வந்த வாகனம் என்பதும், திருடிய வாகனத்துடன் தப்பிச் செல்வதற்காக மெரினா பகுதிக்கு வந்த போது, முதல்வர் கான்வாயை முந்தி சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து அஜித்குமாரை கைது செய்த கோட்டை போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று இன்று காலை முதல்வர் ஸ்டாலின் ஆழ்வார் பேட்டையிலுள்ள தனது வீட்டிலிருந்து தலைமை செயலகம் வரும் போது, ஆழ்வார்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் கான்வாயை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகன ஓட்டியை பிடித்தும் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.