கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டதால் இளைஞருக்கு வெட்டு

கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டதால் இளைஞருக்கு வெட்டு
(கோப்பு படம்)
  • News18
  • Last Updated: October 9, 2019, 10:54 PM IST
  • Share this:
தேனியில் வீட்டு வாசலில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஹெட் போனில் பாட்டுக் கேட்டதால் இளைஞரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அருகே உள்ளது கோடாங்கிபட்டி கிராமம். அந்த கிராமத்தில் வசிக்கும் 23 வயதான சுந்தர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். பிஎஸ்சி படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு சாலை ஓரத்தில் உள்ள தனது வீட்டின் வாசலில் அமர்ந்து, கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்துள்ளார்.


அப்போது, சுந்தர் வீட்டின் வழியாக தனது வீட்டுக்கு கோழிக்கடை நடத்தும் 40 வயதான கண்ணன், 19 வயதான தனது மகன் மனோஜ் உடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது கால் மேல் கால் போட்டுக்கொண்டு செல்போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த சுந்தரை பார்த்ததும் கண்ணன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அதை கவனிக்காமல் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த சுந்தரை அழைத்து, தான் போகும்போது மரியாதை குறைவாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு எப்படி பாட்டு கேட்கலாம் எனக்கூறி போதையில் இருந்த கண்ணன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.பின்னர், கண்ணனின் மகன் மனோஜ்ஜூம் சுந்தரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றி கோழி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தர் தலையில் கண்ணன் வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே சரிந்த சுந்தரை அப்பகுதி மக்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனிசெட்டிபட்டி போலீசார் கண்ணன் மற்றும் மனோஜ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

சுந்தரை வெட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்மேல் கால் போட்டு பாட்டு கேட்டதற்காக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also see...

First published: October 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்