சென்னை ராயப்பேட்டை காசிம் தெருவைச் சேர்ந்த தாவீது ராஜா (20) என்பவர் கடந்த 13ஆம் தேதி இரவு முதல் காணாமல் போயுள்ளார். இதனால் தனது மகனை அவரது தாய் தேவி பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். அடுத்த நாள் காலை தனது மகனை தேடி தாய் தேவி ஆட்டோவில் சென்ற போது ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை YMCA மைதானம் தெற்கு நுழைவுவாயில் அருகே உள்ள குப்பைத் தொட்டி அருகே தேவியின் மகன் தாவீது ராஜா என்பவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
பதறிப்போன தேவி தனது மகனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாவீது ராஜா முன்னரே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தேவி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அண்ணாசாலை காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தபோது சிசிடிவி காட்சியில் 13-ஆம் தேதி இரவு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் தாவீது ராஜாவை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து ஒய்எம்சிஏ மைதானம் தெற்கு வாசல் அருகே உள்ள குப்பைத் தொட்டி அருகே படுக்க வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய அண்ணாசாலை போலீசார் தாவித் ராஜைவை தாக்கி குப்பைத் தொட்டி அருகே விட்டுச் சென்ற நபர்களை அடையாளம் கண்டனர்.
விசாரணையில் ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த ரோசி (எ) சங்கீதா(27) மற்றும் ராயப்பேட்டை அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்த ராக்கி (எ) ராஜேஷ்(23)ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
போலீசார் விசாரணையில் கடந்த 13ம் தேதி இரவு சத்யம் தியேட்டர் பின்புறம் உள்ள பூங்காவில் ரோசி (எ) சங்கீதா உடன் தாவீது ராஜா மது அருந்தி கொண்டு இருந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்தகராறு முற்றிய நிலையில், சங்கீதா உடனிருந்த அவரது நணபர்களான ராக்கி (எ) ராஜேஷ் கிரீம்ஸ் சாலையைச் சேர்ந்த ஜீவா(22), பார்த்திபன்(35) ஆகியோர் சேர்ந்து கட்டை மற்றும் கைகளால் பலமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தாவித் ராஜா மயக்கமடைந்துள்ளார்.
இதனால் மயக்கமடைந்த தாவித் ராஜாவை சங்கீதா மற்றும் ராக்கி (எ) ராஜேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஏற்றி, YMCA தெற்கு நுழைவு வாயில் அருகில் உள்ள குப்பை அருகே இறக்கிவிட்டுச் சென்றதும். பின் தாக்குதலுக்கு உள்ளான தாவீது ராஜா இறந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனால், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி நான்கு நபர்களையும் அண்ணாசாலை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரோசி (எ) சங்கீதா மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தின் கஞ்சா வழக்கும், அவரது நண்பர் ராக்கி(எ) ராஜேஷ் மீது ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்குகளும், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழிப்பறி மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட நால்வரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.