Home /News /tamil-nadu /

அதிமுகவை செயல்படாத நிலைக்குக்‌ கொண்டு சென்றீர்கள்.. ஓபிஎஸ் மீது ஈபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு

அதிமுகவை செயல்படாத நிலைக்குக்‌ கொண்டு சென்றீர்கள்.. ஓபிஎஸ் மீது ஈபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

தலைமைக்‌ கழக நிர்வாகிகள்‌ ஆலோசனைக்‌ கூட்டத்திற்கு புறக்கணித்த நிலையில்‌, தற்போதைய தங்களின்‌ இந்தக்‌ கடிதம்‌ ஏற்படையதாக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    செயல்படாத நிலைக்குக்‌ கொண்டு செல்வதற்கான அனைத்துப்‌ பணிகளையும்‌ செய்தீர்கள் என குற்றம்சாட்டி எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்லத்திற்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப்‌ பொதுக்குழுவில்‌, 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால்‌ கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள்‌ அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால்‌, அந்த சட்ட திட்ட திருத்தங்கள்‌ காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர்‌ என்ற உணர்வில்‌ தாங்கள்‌ எழுதியுள்ள கடிதம்‌ செல்லத்தக்கதல்ல.

    மேலும்‌, உள்ளாட்சி அமைப்புகளில்‌ தற்போது காலியாக இருக்கும்‌ பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்‌ செய்வதற்கு கடைசி நாள்‌ 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில்‌, இத்தனை நாட்கள்‌ பொறுத்திருந்து, கழகத்தின்‌ வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும்‌, 27.06.2022 அன்று
    கூட்டப்பட்ட தலைமைக்‌ கழக நிர்வாகிகள்‌ ஆலோசனைக்‌ கூட்டத்திற்கு தாங்கள்‌ உட்பட அனைவருக்கும்‌ முறையாக தகவல்‌ தெரிவிக்கப்பட்டு, மொத்தம்‌ உள்ள 74 தலைமைக்‌கழக நிர்வாகிகளில்‌ 65 பேர்‌ கலந்துகொண்டனர்‌. 4 பேர்‌ உடல்நிலை சரியில்லை என்று தகவல்‌ தெரிவித்திருந்தனர்‌. தாங்கள்‌ அந்தக்‌ கூட்டத்தை புறக்கணித்த நிலையில்‌, தற்போதைய தங்களின்‌ இந்தக்‌ கடிதம்‌ ஏற்படையதாக இல்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதே போல்‌, நாம்‌ இருவரும்‌ கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின்‌ பொதுக்குழுவை நடத்தவிடாமல்‌ தடுத்து நிறுத்துவதற்காகத்‌ தாங்கள்‌, ஆவடி காவல்‌ ஆணையருக்கு கடிதம்‌ மூலம்‌ புகார்‌ அளித்தும்‌, நீதிமன்றங்களின்‌ மூலம்‌ வழக்குகளைத்‌ தாக்கல்‌ செய்தும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தை செயல்படாத நிலைக்குக்‌ கொண்டு செல்வதற்கான அனைத்துப்‌ பணிகளையும்‌ செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, கட்சியினுடைய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். அதில், உள்ளாட்சி தேர்தல் படிவத்தில் கையெழுத்திட தான் தயாராக இருப்பதாக கடிதத்தில் தெரிவித்திருந்தார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட தயாரா என கடிதத்தில் கேட்டிருந்தார்.

    உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்பிக்க வேண்டும்.இந்த ஏ மற்றும் பி பார்ம் இரண்டிலும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கையெழுத்திட்டால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்குள் படிவங்களை சமர்ப்பித்திருக்க வேண்டும்.

    அதனை குறிப்பிட்டு, எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தவறினால் தொண்டர்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் யார் என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அந்த கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். ஓ.பன்னீர் செல்வம் அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள மகாலிங்கம் மூலம் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு கொடுத்தனுப்பினர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: ADMK, Edappadi Palanisami, O Pannerselvam, OPS - EPS

    அடுத்த செய்தி