ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு விரைந்து வந்து, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவ உயர் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம்பிடித்து விட்டீர்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு லெப்டிணட் ஜெனரல் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக தக்ஷின் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டிணட் ஜெனரல் அ.அருண் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீலகிரி மாவட்டத்தில் 8.12.2021 அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தினர் 13 பேர் உயிரிழந்த துயரமான நேரத்தில், குடும்பத்தினருக்கு தாங்கள் அருகில் இருந்து ஆறுதல் அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியையும், இதயபூர்வமான பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகவல் அறிந்த உடனே - நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் தாங்கள் விரைந்து வந்து, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவ உயர் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம்பிடித்து விட்டீர்கள்.
அந்த தருணத்தில் எந்த எந்த உதவி முடியுமோ அந்த உதவிகளை எல்லாம் தங்களின் தலைமையின் கீழ் உள்ள தமிழ்நாடு அரசின் மொத்த நிர்வாகமும் செய்து தந்தது. இதுபோன்ற ஆதரவுகள்தான் எதிர்காலத்தில் நம் இளைஞர்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேருவதற்கும், ராணுவ உடை அணிவதற்கும், உற்சாகமூட்டுவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமையும்.
தக்ஷின் பாரத் பகுதியின் தலைமை அலுவலர் என்ற வகையில் தங்களுடைய முன்மாதிரியான ஆதரவுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். உங்களுடைய இந்த செயல், பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கும், மூத்த ராணுவ வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு நமக்கு ஆதரவாக இருக்கின்றது என்ற உணர்வை ஏற்படுத்தி, ஊக்கத்தை அளிப்பதோடு தேவைப்படும் காலங்களில் அவர்களுக்கு இந்த அரசு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
இந்த கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததற்கு தங்களுக்கும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும்-நம் மாநிலத்திற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.