60 வயதிலும் உடலில் ஓடுகள் உடைத்து சாதனை செய்த யோகா ரவி!

யோகா ரவி

யோகா கலையின் மூலமாகவும் உடலினை உறுதியாக இரும்பு போன்று வைத்திருக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியதாக யோகா ரவி தெரிவித்தார்.

 • Share this:
  மயிலாடுதுறையில் கல்லூரி பருவத்தில் ரயில்வே ஓடுகளை உடலில் உடைத்து நிகழ்த்திய சாதனையை, 40 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மீண்டும் நிகழ்த்திக் காட்டிய முன்னாள் மாணவர் ரவி. யோகா பயிற்சியால் உடலை இரும்புபோல் வைத்திருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

  மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் பிரபல யோகா பயிற்றுநர் யோகா ரவி. சிறு வயதிலேயே கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு  கலைகளை கற்ற ரவி, 1977-1980ஆம் கல்வியாண்டில் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பி.காம் பயின்றபோது நடைபெற்ற கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியர்கள் முன்னிலையில் தனது நண்பர் பாண்டியன் உதவியுடன் தனது உடலில் கை, தோள், இடுப்பு,  தொடை மற்றும் மண்டைப் பகுதியில் 10 இடங்களில் மங்களூர் ரயில்வே ஓடுகளை உடைத்து சாதனை நிகழ்த்தினார்.

  அதன்பின், ரவி யோகா கலையை பயின்று அக்கலையில் தேர்ச்சி பெற்று, தற்போது சென்னையில் தங்கி இந்தியா முழுவதும் பல்வேறு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்து வருகிறார்.
  தற்போது, 40 ஆண்டுகளைக் கடந்த நிலையில் இன்று மயிலாடுதுறையில் பேராசிரியர் வீட்டில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் இளமை பருவத்தில் நிகழ்த்திய சாதனையை தனது 60-வது வயதில் மீண்டும் நிகழ்த்தினார்.

  வயது முதிர்வின் காரணமாக ரயில்வே ஓட்டினை மண்டைப் பகுதியில் உடைக்க வேண்டாம் என்று நண்பர்களின் வேண்டுகோளுக்கினங்க மண்டை தவிர்த்த பிற இடங்களில் 8 ரயில்வே ஓடுகளை தன் நண்பர் பாண்டியன் உதவியுடன் உடைத்தார்.

  முன்னாள் மாணவர்கள் சந்திப்பின்போது ஓய்வு பெற்ற தனது கல்லூரி பேராசிரியர் வன்மீக வெங்கடாச்சலம் முன்னிலையில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். கராத்தே போன்ற கலைகளின் மூலம் மட்டுமின்றி, யோகா கலையின் மூலமாகவும் உடலினை உறுதியாக இரும்பு போன்று வைத்திருக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியதாக யோகா ரவி தெரிவித்தார். நிகழ்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் சாதனை நிகழ்த்திய ரவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

  செய்தியாளர் கிருஷ்ணகுமார் - மயிலாடுதுறை
  Published by:Arun
  First published: