வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
மயிலாடுதுறை, சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் ரெட்டிசாவடி,நெல்லிகுப்பம், வடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், எடமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, ரெட்டாலடி, வடவூர், திருப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் மீண்டும் நாற்று நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு நடைபெற்றுள்ள நிலையில், கனமழையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், செம்பனார்கோயில், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால், பயிர்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்களுக்கு விவசாயிகள் அடி உரம் இட்ட பிறகு வயல்களுக்கு தண்ணீர் வைப்பது வழக்கம். இந்நிலையில், தற்போது மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. பொள்ளாச்சியில் இருந்து ஆழியாறு சென்ற அரசுப்பேருந்தில் மழைநீர் ஒழுகியதால், பயணிகள் குடைபிடித்தபடி பயணம் செய்தனர்.
இதையும் படிங்க | கார்த்திகை தீபத்திருவிழா: சென்னை டூ திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள்!
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே மின்கம்பம் சரிந்து விழுந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதேபோல் சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.